--- --:--:-- --

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை நிறுத்த ஐகோர்ட்டில் மனு!

8

ட்டமன்ற உறுப்பினர்கள் சுயநலக் காரணங்களுக்காகப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறு கட்சியில் இணைந்து மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிடுவதைத் தடுக்கக் கடுமையான விதிகளைக் கொண்டுவர வலியுறுத்தியும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களை நடத்தத் தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

 

 

சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறு கட்சியில் இணைந்து மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களை நடத்தத் தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

 

 

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே. சுதன் என்பவர் தாக்கல் செய்துள்ள இந்த மனு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய அமர்வு முன் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. மனுவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:பொதுப் பணம் வீணடிப்பு: மக்கள் பிரதிநிதிகள் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் ஏற்படும் நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்காகப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் மக்களின் வரிப்பணம் பெருமளவில் வீணாகிறது.

 

 

இழப்பீடு வசூல்: இத்தகைய சூழல்களில் இடைத்தேர்தல் நடத்தும் செலவை சம்பந்தப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்களிடம் இருந்தே வசூலிக்கும் வகையில் ‘தேர்தல் செலவு பிணைத்தொகை’ முறையைக் கொண்டுவர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

 

 

5 ஆண்டுகள் தகுதிநீக்கம்: சுயநலக் காரணங்களுக்காகப் பதவியை ராஜினாமா செய்யும் மக்கள் பிரதிநிதிகள், மீண்டும் நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட முடியாதவாறு 5 ஆண்டுகள் வரை ‘தடைக் காலம்’ அல்லது தகுதிநீக்கம் விதிக்கும் சட்டத் திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

 

 

த.வெ.க-வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), பி.சத்யபாமா (தாராபுரம்), கே.மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகிய 6 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்தனர்.

 

 

இதில் 4 தொகுதிகள் தொடர்பாகத் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், எஞ்சிய மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் த.வெ.க சார்பில் மீண்டும் கே.மரகதம் குமரவேல் மற்றும் பி.சத்யபாமா ஆகியோரே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர்களின் தீர்ப்பை வெறும் அரசியல் ஆதாயமாகப் பயன்படுத்தக் கூடாது என்பதைக் சுட்டிக்காட்டி இந்த இடைத்தேர்தல்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon