இனி அவருக்கு பதில் இவர் – உதயநிதி ஸ்டாலின்
கடந்த 116 நாட்களில் 200 கொலைகள், 500 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன என்றும் சிறை மரணங்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை, குறைந்தபட்சம் SORRYயும் கிடைக்கவில்லை என்று சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கையின் போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது, 116 நாள் ஆட்சியில் மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு மிகப்பெரிய துயரமாக உள்ளது. செய்தித்தாளில் தினமும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என செய்திகள் வருகிறது. கறிக்கடையில் கூட இந்த அளவிற்கு வெட்ட மாட்டார்கள். தமிழகத்தில் அந்த அளவிற்கு வெட்டுகுத்து நடக்கிறது. நகைக்காக கொலை, போதை பொருளை அம்பலப்படுத்தினால் கொலை, மது போதையில் கொலை என கொலை நடக்காத நாளே தமிழ்நாட்டில் இல்லை என்றார்.
டிவி சீரியல்களில் நடிகர்கள் யாராவது விலகினால் இனி அவருக்கு பதில் இவர் என பெயர் போடுவார்கள். அதேபோல் முதல்வரைக் கேள்வி கேட்டால் அமைச்சர்கள் எழுந்து பதில் அளிக்கின்றனர். வேளாண் துறை அமைச்சருக்கு பதில், பொதுப்பணித் துறை அமைச்சர் என மாற்றி மாற்றி பதில் சொல்கின்றனர். காவல் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்ற நம்பிக்கையில் நான் பேசுகிறேன் என விமர்சனம் செய்தார்.
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர், அமைச்சரவை என்பது கூட்டாக செயல்படுவது தான். அதனால் எந்த துறை சார்ந்த கேள்விகளுக்கும் எந்த அமைச்சர்கள் வேண்டுமானாலும் பதில் அளிக்கலாம் என தெரிவித்தார். அதனால் இந்த கேள்விக்கு இவர் தான் பதிலளிக்க வேண்டும் என்ற விதி எதுவும் இல்லை என எடுத்துரைத்தார்.
இதை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காவல் மரணங்களுக்கு எதிராக பேசிய தற்போதைய முதல்வர் விஜய், Sorry வேண்டாம்; நீதிதான் வேண்டும் என்றார். ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்த 116 நாட்களில் இதுவரைக்கும் 8 காவல் மற்றும் சிறை மரணங்கள் நடந்திருக்கின்றன; ஆனால் இதுவரைக்கும் அதற்கு நீதியும் கிடைக்கவில்லை; முதலமைச்சரிடம் இருந்து குறைந்தபட்சம் Sorry-யும் கிடைக்கவில்லை என்றார்.
மேலும் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய காவல்துறை, இப்படி கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட என்ன காரணம்? ஜனநாயக ரீதியாக போராடும் மக்களை பார்த்து இந்த அரசு பயப்படுகிறதா? என்றும் கேள்வி எழுப்பினார். உங்களிடம் கேள்வி கேட்டு சரியான பதிலைப் பெற வேண்டிய பொறுப்பை மக்கள் கொடுத்துள்ளனர். ரீல்ஸ் கன்டென்ட், ரோல் கேமரா, ஆக்ஷன், குட்டிக் கதை சொல்லாமல் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்; இன்னும் திமுகதான் ஆட்சி என்ற நினைப்பை எடுத்துவிட்டு முதல்வர் பதிலளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





