--- --:--:-- --

தீபாவளி கொண்டாட முடியாமல் போலீசாரை அலையவிட்ட கொள்ளையன்!

3

மைனா திரைப்படத்தில் வருவதைப் போன்று போலீசாரை தீபாவளி கொண்டாட முடியாமல் செய்திருக்கிறார் திருடன் ஒருவர். கிட்டத்தட்ட மைனா படத்தில் வரும் காட்சியை போன்று காவலர்களை அலைய வைத்திருக்கின்றார் கொள்ளையர் ஒருவர். சென்னையை அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்த இமானுவேல் ஜெயசீலன் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

 

கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி தனது குடும்பத்துடன் தேவாலயத்துக்கு சென்று இமானுவேல் ஜெயசீலன் திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 120 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை துவக்கினர்.

 

தனிநபர் ஒருவர் தலையில் ஹெல்மட் உடன் எக்ஸ்‌எல் இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து செல்வதை கண்ட போலீசார் அவர்தான் திருட்டில் ஈடுபட்டு இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வந்து சாலையில் இருந்த அடுத்தடுத்த சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டனர். அதில் மேலும் ஒருவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றி செல்லும் அந்த நபர் பாதியிலேயே அவரை இறக்கி விட்டு விட்டு அழகாபுத்தூர் அருகே மாயமாகியுள்ளார்.

 

இருசக்கர வாகனத்தில் ஏறி நபரின் முகத்தை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் பாதையில் லிஃப்ட் கேட்டு ஏறியவர் என்பது தெரியவந்தது. இதனிடையே அனகாபுத்தூர் அருகே ஒரு சந்திப்பில் கொள்ளையன் பயன்படுத்திய இருசக்கர வாகனம் இருப்பதை உறுதி செய்த போலீசார் அந்த வாகனத்தின் உரிமையாளருக்கும், கொலைச் சம்பவத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதையும் கண்டறிந்தனர்.

 

இதனால் குழப்பம் அடைந்த போலீசார் 5 தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டனர். போலீசார் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத நிலையில் கொள்ளையனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுதுதான் ஒரு துப்பு கிடைத்தது. அந்த எக்ஸெல் வாகனத்தின் சேஸ் எண்ணை சோதித்ததில் மதுரை அருகே விற்பனை செய்யப்பட்டதும், பின்னர் அது திருடு போனதும் தெரியவந்தது.

 

மதுரைக்கு விரைந்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட நபர் சிறையில் இருப்பதை அறிந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பரமக்குடியை சேர்ந்த ஜான் ஜோசப் என்பவர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரது செல்போன் எண் பயன்பாட்டை ஆய்வு செய்ததில் போலீசார் அதனை உறுதி செய்தனர்.

 

இதனிடையே கடந்த 6 ஆம் தேதி திருமணமாகி புது மாப்பிள்ளையாக மாமியார் வீட்டில் இருந்த ஜான் ஜோசப்பை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தனி ஒருவராக போலீசாரை அலைய விட்ட கொள்ளையனை கைது செய்ததால் போலீசார் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.

Leave a Reply

Right Menu Icon