பெரியார், அம்பேத்கர் பெயர்கள் நீக்கம்..!
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் அம்பேத்கர் மற்றும் பெரியார் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டதன் பின்னணியில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இந்த புறக்கணிப்பு பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும், இதற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அமைச்சர்களும் உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த தவறு எவ்வாறு நடந்தது என்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும், எதிர்காலத்தில் வெளியாகும் கொள்கை ஆவணங்களில் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், தலித்துகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்துவது, அவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக தனி சட்டங்களை பரிசீலிப்பது உட்பட தலித் மக்களுக்குச் செய்ய வேண்டிய பல கடமைகள் தமிழக அரசுக்கு உள்ளதாக வி.சி.க தலைவர் சுட்டிக்காட்டினார். அரசு இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று எதிர்பார்ப்பதாகவும், இதற்கான பயனுள்ள நடவடிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றும் திருமாவளவன் கூறினார்.
வியாழக்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் 2026-27 ஆம் ஆண்டிற்கான கொள்கைக் குறிப்பில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, பெரியார், அம்பேத்கர் மற்றும் நீதிக்கட்சி பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டதை அடுத்து இந்தச் சர்ச்சை வெடித்துள்ளது. முந்தைய தி.மு.க அரசின் கொள்கைக் குறிப்பில் இந்த தலைவர்கள் மற்றும் சமூக நீதி, இடஒதுக்கீடு போராட்டங்களில் அவர்களின் பங்களிப்பு ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன. தற்போதைய ஆவணத்தில் வகுப்புவாரி அரசாணை, பெரியாரின் போராட்டங்கள், மண்டல் ஆணையம் மற்றும் மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவன சேர்க்கைகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது ஆகிய குறிப்புகளும் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றின் முக்கியமான அத்தியாயங்களை த.வெ.க அரசு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்வதாக தி.மு.க குற்றம் சாட்டியுள்ளது. சமூக நீதியின் தொட்டிலாகவும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் சக்திவாய்ந்த குரலாகவும் கருதப்படும் மாநிலத்தில், இந்த குறிப்புகளைத் தவிர்த்தது வரலாற்றுத் துரோகம் என்று தி.மு.க சட்டப்பிரிவின் இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம் சாட்டினார்.
திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதியாகவே நீதிக் கட்சி மற்றும் முக்கிய சமூக நீதித் தலைவர்களின் பங்களிப்புகள் அகற்றப்பட்டதாக அவர் கூறினார். காங்கிரஸ் மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தபோதிலும், த.வெ.க நிர்வாகம், பா.ஜ.க அரசின் நிழலாக செயல்படுவதாக தி.மு.க மேலும் குற்றம் சாட்டியது. இந்த விமர்சனத்திற்கு பதிலளித்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத் குமார், இந்தக் குறிப்புகள் விடுபட்டதற்குத் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும், திருத்தப்பட்ட கொள்கைக் குறிப்பு வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்புக் குறைக்கப்பட்ட முடிவையும் திருமாவளவன் விமர்சித்தார். இந்த நடவடிக்கை பொருத்தமற்றது என்று கூறிய அவர், தி.மு.க தலைவருக்கு முன்பு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார்.
நேரு, அம்பேத்கர், பெரியார் பெயர் நீக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். “பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் நீக்கப்பட்டதன் காரணத்தை தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும். கொள்கை விளக்கக் குறிப்பேட்டிலிருந்து நீக்கப்பட்டது என்பதை, தற்செயலானதாக, சாதாரண ஒரு தவறாக பார்க்க முடியாது. திட்டமிட்டச் செயலாகவே கருத வேண்டி உள்ளது” என்றார்.
இயக்குநர் அமீர் வெளியிட்டு உள்ள சமூக வலைதள பதிவில், “பெரியார், அண்ணா, அம்பேத்கர் என்பது பெயர்கள் அல்ல தமிழ்நாட்டின் அடையாளங்கள். அதை அழிக்கவோ, மறைக்கவோ எந்த முகமூடியோடு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டியது தமிழர்களின் கடனை என குறிப்பிட்டு உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




