எ.வ.வேலுவுக்கு எதிரான லுக்அவுட் நோட்டீஸ் ரத்து: ஐகோர்ட்
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், வெளிநாடு செல்லும் முன், நீதிமன்ற அனுமதியை பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை முறைகேடு தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரியும், தனக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக்கோரியும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஜான் சத்யன் கோரிக்கை விடுத்தார்.
எ.வ.வேலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வில்சன், ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை முன் ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளதால், லுக் அவுட் நோட்டீஸ் தேவையில்லாதது எனக் குறிப்பிட்டார்.
லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு கோரிக்கையை ஏற்று, பதில் மனு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கு தொடர்பாக புலன் விசாரணையை தொடரலாம் எனவும், வேலுவுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கலாம் எனவும் உத்தரவிட்டார்.






