அரசின் நிவாரணத்தை வாங்க சபரி வர்மனின் குடும்பம் மறுப்பு..!
சிறையில் உயிரிழந்த விசாரணைக் கைதி சபரி வர்மனின் குடும்பத்தினர் அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வாங்க மறுத்துவிட்டதால் அமைச்சர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மன் குட்கா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்தார்.
அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் சிறைக் காவலர்கள் 3 பேர் மற்றும் சிறை கைதிகள் 8 பேர் கைதுசெய்யப்பட்டனர். அதேநேரம் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும், உரிய நிவாரணம் கேட்டும் சபரி வர்மனின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் நேற்று நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அமைச்சர்கள் ஸ்ரீநாத், ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் சபரி வர்மனின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினர்.
அப்போது, சபரி வர்மன் குடும்பத்திற்கு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் தற்காலிக அரசுப் பணி ஆணையை அமைச்சர்கள் வழங்க முன் வந்தனர்.
இதனை நிராகரித்துவிட்ட குடும்பத்தினர் சபரி வர்மனின் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட வீடியோவை மறு ஆய்வு செய்த பிறகே அவரது உடலை பெறுவோம் என்று தெரிவித்தனர்.
இதனால், அமைச்சர்களின் சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. சபரி வர்மனின் உடலை பெற்றுக் கொள்வது குறித்து இன்று மாலைக்குள் முடிவை அறிவிப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.






