ரூ.1,000 அபராதம் விதிக்க சென்னை போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை..!
சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்படும் பெரும்பாலான கார்களில் சன்ரூஃப் வசதி ஒரு முக்கிய அங்கமாக இடம் பெற்று வருகிறது. காரின் கேபினுக்குள் காற்றோட்டமும், போதிய வெளிச்சமும் வருவதற்காகவே இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பேனலை தேவைக்கேற்ப திறந்து மூடிக் கொள்ள முடியும். ஆனால், தற்காலத்தில் இந்த சன்ரூஃப் வசதியானது பலராலும் ஒரு விளையாட்டு இடமாக தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, கார் இயங்கிக் கொண்டிருக்கும்போது குழந்தைகளை அதன் வழியே வெளியே நிற்க வைத்து அழைத்துச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சன்ரூஃப் என்பது வெளியே நின்று பயணிப்பதற்கானது அல்ல என்று பல்வேறு தரப்பிலிருந்து அறிவுறுத்தப்பட்ட நிலையிலும், இந்த ஆபத்தான பழக்கம் குறையவில்லை.
இதுபோன்ற ஆபத்தான பயணங்களால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து, சென்னை போக்குவரத்து காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, காரின் சன்ரூஃபில் குழந்தைகளை ஆபத்தான முறையில் நிற்க வைக்கக்கூடாது என்றும், அவ்வாறு ஆபத்தான முறையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு மோட்டார் வாகன சட்டம் பிரிவு 184-ன் கீழ் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையானது சென்னை மட்டுமன்றி மற்ற மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை முறையாக மதித்து வாகனங்களை இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காரில் பயணிக்கும்போது சன்ரூஃப் வழியாக குழந்தைகளை வெளியே நிற்க வைப்பது மிகவும் ஆபத்தான ஒரு செயலாகும். இதனால் குழந்தைகளுக்குக் கடுமையான காயங்களோ அல்லது சில நேரங்களில் உயிரிழப்புகளோ கூட ஏற்படக்கூடும்.
பொதுவாக காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது கட்டாய விதியாகும். ஆனால், சன்ரூஃபில் எந்தவித பாதுகாப்பும் இன்றி நிற்கும்போது, கார் திடீரென நிறுத்தப்பட்டால் குழந்தைகள் காரை விட்டு வெளியே தூக்கி வீசப்படவோ அல்லது உடலில் பலத்த காயங்கள் ஏற்படவோ அதிக வாய்ப்புள்ளது. மேலும், சன்ரூஃப் கண்ணாடியின் விளிம்புகள் கூர்மையாக இருக்கும் என்பதால், அவை குழந்தையின் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயங்களை ஏற்படுத்தக்கூடும்.
இதுமட்டுமன்றி, வாகனம் சாலையில் செல்லும்போது சன்ரூஃப் வழியாக வெளியே நிற்கும் குழந்தைகளின் முகத்தில் பூச்சிகள், மரக்கிளைகள், மின்சார ஒயர்கள் அல்லது பறவைகள் போன்றவை எதிர்பாராத விதமாக மோதுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகள் சீட் பெல்ட் அணியாமல் சன்ரூஃபில் நிற்பதால், ஏதேனும் விபத்து நேரிடும் பட்சத்தில் காரில் உள்ள ஏர்பேக் வசதி வேலை செய்யாமல் போய், அவர்களின் உயிருக்கே அது அச்சுறுத்தலாக முடியலாம். இத்தகைய பேராபத்துகள் குறித்து தெரிந்திருந்தும், குழந்தைகள் மட்டுமன்றி சில நேரங்களில் பெரியவர்களும் கொண்டாட்டம் என்ற பெயரில் சன்ரூஃப் வழியே வெளியே ஏறி நின்று தங்களுக்குத் தாங்களே ஆபத்தைத் தேடிக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





