இந்தோனேசியாவின் மிக உயரிய பிந்தாங் அதிபூர்ணா விருதைப் பெற்ற பிரதமர்..!
மூன்று நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய அரசு விருதான ‘பிந்தாங் ரெபப்ளிக் இந்தோனேசியா அதிபூர்ணா’ (Bintang Republik Indonesia Adipurna) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஜகார்த்தாவில் உள்ள இந்தோனேசிய அதிபர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பான அரசு விழாவில், அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ (Prabowo Subianto) இந்த விருதை பிரதமர் மோடிக்கு நேரில் அணிவித்தார்.
இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகள், நாகரிகப் பிணைப்புகள் மற்றும் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி ஆற்றிய அசாதாரண பங்களிப்பைப் பாராட்டும் விதமாக இந்த உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளதாக அதிபர் பிரபோவோ பெருமிதத்துடன் தெரிவித்தார்.
விருதைப் பெற்றுக் கொண்ட பின் கூட்டாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:இந்தோனேசியாவின் இந்த மிக உயரிய விருது எனக்கு அளிக்கப்பட்ட பெரும் மதிப்பாகும். இந்த கௌரவம் எனக்குக் கிடைத்ததல்ல, இது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும், கோடிக்கணக்கான குடிமக்களுக்கும் சொந்தமானது.
இது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வரலாற்றுச் சிறப்புமிக்க, ஆழமான உறவின் அடையாளமாகும். இதற்காக அதிபர் பிரபோவோ மற்றும் இந்தோனேசிய அரசுக்கும், மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.





