தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்..!
தவெக தனது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியான அண்ணா பிறந்தநாள் முதல் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு 755 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதற்கான ஒப்பந்தப் புள்ளிகளையும் கோருவது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளை வரவேற்கும் திட்டம்தான் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’. தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கத்தின் ஆசீர்வாதமாக ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும். கூடவே ஒரு ‘பேபி வெல்கம் கிட்’ (Baby Welcome Kit) வழங்கப்படும். ஊட்டச்சத்துப் பொருட்கள், பேபி டிரஸ்ஸஸ், தரமான பேபி சோப்ஸ், பேபி ஆயில், பேபி பவுடர், பேபி கொசுவலைகள், பொம்மைகள், நாப்கின்ஸ் மற்றும் டயப்பர்கள் இவை எல்லாம் அந்த பேபி வெல்கம் கிட்டில் இருக்கும்” என தவெகவின் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுக்கப்பட்டிருந்தது.
தவெக தேர்தல் பிரச்சாரத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,500, பெண்களுக்கு மாநிலம் முழுவதும் கட்டணமில்லாப் பேருந்து, வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் என பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தன.ஆட்சி அமைத்து 40 நாட்கள் கடந்த நிலையில் திட்டங்கள் எப்போதிலிருந்து செயல்பாட்டுக்கு வரும் என மக்கள் மனதில் கேள்வி எழுந்துவந்த நிலையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் தொடங்குவதாக அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயின் பிறந்தநாளான நேற்று (ஜூன் 22ஆம் தேதி) முதல் பிறந்த குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்று, அரசு மருத்துவமனையில் பிரசவிக்கும் குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





