மோடியை இன்று சந்திக்கிறார் வாசன்: பாஜகவில் இணைவது பற்றி பேச்சு?
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் சந்திக்கிறார். பாஜகவில் அவர் இணைவாரா என்ற எதிர்பார்ப்புகளை இது ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்த போது, அவரை வரவேற்க சென்னை விமான நிலையத்திற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வந்திருந்தார். அப்போது வாசனுக்கு முக்கியத்துவம் தந்து பிரதமர் புன் முறுவலுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அத்துடன், தம்மை டெல்லியில் வந்து சந்திக்கும்படி வாசனை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டாதகவும் கூறப்படுகிறது. மாற்று கட்சித் தலைவரான வாசனுக்கு பிரதமர் மோடி தந்த முக்கியத்துவம், அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, வாசன் சந்தித்து பேசுகிறார். பாஜகவில் வாசன் இணையப் போவதாக, அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு உலவும் சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.






