த.வெ.க-வில் இணைந்த முக்கியப் பிரபலங்கள்..!
சென்னை அடுத்த பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில், இன்று மாற்று கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் தங்களை இக்கட்சியில் இணைத்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி காலை 11 மணியளவில் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அதிகாலை முதலே தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பனையூர் அலுவலக நோக்கி வரத் தொடங்கினர். காலை 8:00 மணிக்கெல்லாம் ஏராளமான மாற்றுக்கட்சி நிர்வாகிகள் அலுவலகத்தின் முன்பு குவியத் தொடங்கினர்.
அலுவலக நுழைவாயில் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளே செல்வதற்காக நீண்ட நேரமாகக் காத்திருந்தனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர், பாதுகாப்பு காரணங்களுக்காக முக்கியமான நிர்வாகிகளை மட்டும் அடையாளம் கண்டு, கதவை திறந்துள்ளே அனுமதிக்க தொடங்கினர். இதனால் அதிருப்தியடைந்த மற்ற நிர்வாகிகள், நாங்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணையத்தான் வந்திருக்கிறோம், எங்களையும் உடனே உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கூறி முண்டியடிக்கத் தொடங்கினர். இதனால் அங்கிருந்த காவல்துறையினருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.
நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருந்த வேளையில், ஒரு கட்டத்தில் காவல்துறையினர் கதவை லேசாகத் திறந்தனர். அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி, அங்கு திரண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சி நிர்வாகிகள் ஒரே நேரத்தில் கதவை பலவந்தமாகத் தள்ளிக் கொண்டு, முண்டியடித்தபடி அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
தற்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளே சென்றுவிட்ட நிலையில், வெளியே சாலையில் மேலும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் காத்துக் கிடக்கின்றனர். தாங்களும் உள்ளே செல்ல வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் தொடர்ந்து வெளியேயுள்ள காவல்துறையினருடன் வாக்குவாதத்திலும் தள்ளுமுள்ளுவிலும் ஈடுபட்டதால், பனையூர் த.வெ.க அலுவலகப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
இதனிடையே, எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இருந்த அ.தி.மு.க முன்னாாள் அமைச்சர் கோமதி சீனிவாசன், கம்பம் எம்எல்ஏ ஜெகன்நாத் மிஸ்ரா, நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், இ.பி.எஸ் உறவினர் மேனகா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் த.வெ.க.வில் இணைந்தனர். நமது மக்கள் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பை கம்பம் எம்.எல்.ஏ ஜெகன்நாத் மிஸ்ரா த.வெ.கவில் இணைத்தார்.
இந்நிகழ்வில், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார். அப்போது, த.வெ.கவில் இணையும் கட்சியினருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படும். அ.தி.மு.க வழிமாறி செல்லும்போது முதல் ஆளாக குரல் கொடுத்தவர் நமது த.வெ.க அமைச்சர் செங்கோட்டையன். 50 ஆண்டுகுள் பழமைவாதி செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கியது அக்கட்சி தலைமையின் தவறு. அ.தி.மு.கவும், தி.மு.க.வும் ஒன்று சேர்ந்ததால் தான் அதிமுகவினர் தவெகவில் இணைகின்றனர் என்றார்.





