தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு?
தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் கோடை மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, திருத்தணியில் கடந்த 5 நாட்களாக வெயில் சதம் அடித்த சூழலில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடைவிடாது ஆலங்கட்டி மழை பெய்தது.
அதேபோல, வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. வேலூர், அரியூர், ஊசூர், கணியம்பாடி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்தரமேரூர் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை திருவண்ணாமலை, திருச்சி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நாளை மறுநாள் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
27ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.





