--- --:--:-- --

முதல்முறையாக கூட்டணி ஆட்சி! 59 ஆண்டுக்கு பின் ஆட்சியில் காங்கிரஸ்… கொங்கு மண்டலத்துக்கு அடித்த ஜாக்பாட்!

thalapathy-vijay-k-rajan-194740819-16x9_0

விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இணைந்ததன் மூலம், தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது. 23 அமைச்சர்கள் புதியதாக பதவியேற்ற நிலையில் கொங்கு மண்டலத்துக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. அவிநாசி கமலி உள்பட 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

 

 

தமிழ்நாடு அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு மெகா திருப்பத்தை, மே 21-ம் தேதியான இன்று சென்னை கிண்டி ராஜ்பவன் நேரில் கண்டது. “கூட்டணி ஆட்சி… அதிகாரப் பகிர்வு…” எனத் தேர்தல் மேடைகளில் தவெக தலைவர் விஜய் உதிர்த்த வார்த்தைகள் வெறும் தேர்தல் கண்துடைப்பு அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய புரட்சி அரங்கேறியுள்ளது.

 

 

புதிய அத்தியாயம் படைத்த விஜய்!

 

திமு‌க, அதிமுக என இரண்டு திராவிடக் கட்சிகள் மட்டுமே அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தங்களுக்குள் மாற்றி மாற்றி அனுபவித்து வந்த கோட்டை அதிகாரத்தில், முதன்முறையாகக் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு கொடுத்து, புதிய ‘தமிழ்நாடு 2.0’ என்ற அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

 

 

108 இடங்களைப் பெற்று, ஆட்சி அமைக்க இன்னும் 11 இடங்கள் தேவைப்பட்ட இக்கட்டான சூழலில், தன்னைத் தாங்கிப் பிடித்த காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக ஆகிய தோழமைக் கட்சிகளுக்கு அதிகாரத்திலும் பங்கு தர விஜய் அழைப்பு விடுத்தபோதே அரசியல் களம் சூடானது. கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என மறுத்துவிட்ட நிலையிலும், பிடிவாதமாகப் பாய்ந்து வந்து கைகுலுக்கியுள்ளது காங்கிரஸ்.

 

 

மேடையில் ஒலித்த ராகுல் முழக்கம்!

 

 

ஆளுநர் அர்லேகர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான அமைச்சரவை விரிவாக்க விழாவில், 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதில் ஒட்டுமொத்த அரசியல் அரங்கையும் உற்று நோக்க வைத்தது காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் பதவியேற்புதான்.

 

 

 

கிள்ளியூர் ராஜ்குமார், மேலூர் விஸ்வநாதன் ஆகியோர் மேடை ஏறியபோது, ராஜ்பவன் வளாகமே அதிரும் வகையில் “ராஜீவ் காந்தி வாழ்க… ராகுல் காந்தி புகழ் வாழ்க…” என முழக்கங்களை எழுப்பினர். “பதவிப் பிரமாண உறுதிமொழியில் இது இல்லையே!” என ஆளுநர் அங்கேயே மென்மையாக சுட்டிக்காட்டியது தனி ரகம்.

 

 

சரியாக, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில், தமிழகத்தில் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியில், அதுவும் அமைச்சர் நாற்காலியில் அமர்வது தற்செயலான நிகழ்வாக இருந்தாலும், அது கதர் சட்டையினருக்குக் கிடைத்த அசுர பலம் என்றே சொல்ல வேண்டும். இத்தனை காலம் தமிழகத்தில் ‘தேய்ந்து போன’ சக்தியாகப் பார்க்கப்பட்ட தங்களுக்கு, மீண்டும் அரசு அதிகாரத்தில் பங்கு கிடைத்திருப்பதால், தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் எல்லையற்ற உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.

 

கொங்கு மண்டலத்துக்கு அடித்த ஜாக்பாட்!

 

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் பின்னணியில் மிகத் துல்லியமான அரசியல் கணக்குகளைப் போட்டுள்ளார் முதலமைச்சர் விஜய். தலைநகர் சென்னைக்கு சிங்காரச் சலுகையாக 7 அமைச்சர் பதவிகள் வாரி வழங்கப்பட்டிருந்தாலும், இந்த ஆட்டத்தில் நிஜமான ஜாக்பாட் அடித்திருப்பது கொங்கு மண்டலத்துக்குத்தான்.

 

 

அடுத்தடுத்து 6 அமைச்சர் நாற்காலிகளை கொங்கு பகுதிக்கு அள்ளிக் கொடுத்து, மேற்கு மண்டலத்தை தன்வசப்படுத்தியுள்ளார் விஜய். குறிப்பாக, 6 தொகுதிகளை மட்டுமே கொண்ட நாமக்கல் மாவட்டத்துக்கு மட்டும் திருச்செங்கோடு அருண்ராஜ், ராசிபுரம் லோகேஷ் தமிழ்ச்செல்வன், குமாரபாளையம் விஜயலட்சுமி என 3 அமைச்சர்கள் கிடைத்துள்ளனர்.

 

 

ஈரோட்டுக்கு செங்கோட்டையன், பாலாஜி என இருவர், கோவைக்கு சம்பத்குமார், விக்னேஷ் என இருவர், சேலத்துக்கு பார்த்திபன், மற்றும் அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ கமலி என கொங்குப் பகுதி முழுவதும் தவெக-வின் கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. அவிநாசி கமலி 2-ஆவது நபராகவே பதவியேற்று மாஸ் காட்டியுள்ளார்.

 

 

லோகேஷுக்கு யோகம், சத்யபாமாவுக்கு ஏமாற்றம்!

 

அதிமுகவில் அவிநாசியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ், ராசிபுரத்தில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் தற்போது அமைச்சராகி இருப்பது, தனபால் ஆதரவாளர்கள் இடையே குஷியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரம், செங்கோட்டையனின் நிழல்போல செயல்படும் திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ. சத்தியபாமாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்காதது, பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

 

 

மேலும், தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி போன்ற பகுதிகளுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்காதது லேசான முணுமுணுப்பை ஏற்படுத்தியது. விரைவில் மினி அமைச்சரவை அடுத்த 2 வாரங்களில் இருக்கும் எனவும், அப்போது விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தலா ஒரு அமைச்சர் பதவி தரப்படும் என்று கூறப்படுகிறது. எது எப்படியானாலும், தளபதி விஜயின் இந்த ’33 பேர்’ மெகா டீம், தமிழக அரசியலின் எதிர்காலப் பாதையை முற்றிலுமாக மாற்றியமைக்கப் போவது உறுதி.

 

 

 செங்கோட்டையன் இலாகா மாற்றம்; முதல்வர் வசம் முக்கியத் துறைகள்!

 

​பதவியேற்ற புது அமைச்சர்களின் இலாகா விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

அத்துடன், மிக முக்கியமாகக் கவனிக்கப்படுவது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் இலாகா மாற்றம் தான். அவரிடம் இருந்த நிதித்துறை மரிய வில்சனிடம் ஒப்படைக்கப்பட்டு, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை செங்கோட்டையனுக்கு தரப்பட்டுள்ளது.

 

 

​முதல்வர் வசம் பாதுகாப்புக் கோட்டை!

 

​எந்தவித குழப்பங்களுக்கும் இடமில்லாமல், மாநிலத்தின் மிக முக்கியமான துறைகளான காவல் துறை மற்றும் உள் துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டிலேயே முதல்வர் வைத்திருக்கிறார். சட்டம்-ஒழுங்கைப் பேணுவதிலும், அரசின் செயல்பாடுகளைத் துல்லியமாகக் கண்காணிப்பதிலும் முதல்வர் எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி.

 

 

​புதிய மாற்றங்களின்படி, பல முக்கியத் துறைகளுக்குத் தகுதியான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ரஞ்சித்குமார் வனத்துறையையும், குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி பால்வளத்துறையையும் கவனிக்க உள்ளனர். அவிநாசி எம்.எல்.ஏ. கமலி கால்நடைத்துறையிலும், கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத் வேளாண் துறையிலும் களமிறங்குகிறார்கள். மேலும், திருவாடனை ராஜீவ் சுற்றுச்சூழல் துறையையும், கடலூர் ராஜ்குமார் வீட்டுவசதித்துறையையும், அரக்கோணம் காந்திராஜ் கூட்டுறவுத்துறையையும் பொறுப்பேற்றுள்ளனர்.

 

 

​தொழில்துறை முதல் தொழில்நுட்பம் வரை!

 

​தொழில்துறையில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர ஓட்டபிடாரம் மதன்ராஜா சிறு, குறு, நடுத்தர தொழில்துறையிலும், சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறையை ராஜபாளையம் ஜெகதீஸ்வரியும் கவனிக்க உள்ளனர். கிள்ளியூர் ராஜேஷ் குமார் சுற்றுலாத்துறைக்கும், ஈரோடு கிழக்கு விஜய் பாலாஜி கைத்தறி மற்றும் ஜவுளித்துறைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையை ராசிபுரம் லோகேஷ் தமிழ்ச்செல்வன் கையில் எடுத்துள்ளார்.

 

​நவீனமயமாகும் நிர்வாகம்!

 

​காலத்திற்கு ஏற்ப நவீன தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், வேளச்சேரி குமார் ஏ.ஐ. (AI) மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர்களுடன் ஸ்ரீபெரும்புதூர் தென்னரசு வெளிநாடுவாழ் தமிழர் நலனையும், கோவை வடக்கு சம்பத் குமார் பிற்படுத்தப்பட்டோர் நலனையும், அறந்தாங்கி முகமது பர்வேஸ் தொழிலாளர் நலனையும், தாம்பரம் சரத்குமார் மனிதவளத்துறையையும் வழிநடத்த உள்ளனர்.

 

 

புதிய அமைச்சர்களின் இந்த வருகை, அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் புதிய வேகத்தைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon