--- --:--:-- --

திருச்சி: கொலையில் முடிந்த மாமியார்-மருமகள் தகராறு

9

திருச்சியில் மாமியார் மருமகள் இடையேயான தகராறில் தாயை அடித்துக் கொலை செய்த மகனை காவலர்கள் கைது செய்துள்ளனர். திருச்சி கணேசபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம், பாப்பாத்தி தம்பதியரின் மகன் பிரகாஷ். பட்டப்படிப்பு முடித்துள்ள பிரகாஷுக்கு வேலை ஏதும் கிடைக்கவில்லை என தெரிகிறது. பிரகாஷுக்கும், வெண்ணிலா என்பவருக்கும் ஒன்பது மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

 

இந்நிலையில் பிரகாஷின் தாய்க்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு முன் தகராறு பெரிதாகவே மனைவி வெண்ணிலாவே அவரது சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்தில் கொண்டு சென்று விட்டு வந்துள்ளார் பிரகாஷ். நள்ளிரவு ஒரு மணிக்கு திரும்பிய பிரகாஷ் இனி உன் மருமகளால் தொல்லை இல்லை என்றும் தாய் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

அப்போது தாய்க்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற பிரகாஷ் தாய் பாப்பாத்தியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். தடுக்க வந்த தந்தை ஆறு முகத்தையும் அவர் தாக்கியுள்ளார். மகன் தாக்கியதில் படுகாயம் அடைந்த பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாயை கொன்ற மகனை கைது செய்துள்ள பொன்மலை காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon