இல. பத்மநாபனுடன் இணைந்து பல்லடத்தில் செல்வராஜ் வாக்குசேகரிப்பு!
செல்வராஜுடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இல. பத்மநாபன்
பல்லடம்: தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல்லடம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ், தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேர்தல் பிரசாரம் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளதால், வேட்பாளர்கள் தங்கள் தொகுதியின் மூலைமுடுக்கெல்லாம் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், பல்லடம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவரும், கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான இல. பத்மநாபனுடன் இணைந்து இன்று பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

பல்லடம் தொகுதிக்குட்பட்ட வீரபாண்டி பகுதியில் திறந்த வாகனத்தில் சென்ற வேட்பாளர் செல்வராஜ், பொதுமக்களிடையே ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு ஆதரவு கோரினார். அப்போது அவருடன் வந்த மாவட்டச் செயலாளர் இல. பத்மநாபன், திமுக அரசின் சாதனைகளை விளக்கி மக்களின் ஆதரவைத் திரட்டினார். இதனைத் தொடர்ந்து, பொங்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட புனித அந்தோனியார் ஆலயத்திற்குச் சென்ற வேட்பாளர், அங்குள்ள கிறிஸ்தவப் பெருமக்களைச் சந்தித்து ஆசி பெற்றதோடு, தங்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பிரசாரத்தின் போது வேட்பாளர் செல்வராஜ் பேசும்போது, “பல்லடம் தொகுதியின் ஒவ்வொரு வீதிக்கும் அடிப்படை வசதிகள் தங்குதடையின்றி சென்றடைய வேண்டும் என்பதே ‘திராவிட மாடல் 2.0’ அரசின் முக்கிய இலட்சியம். குறிப்பாக பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, இல்லத்தரசிகளுக்கான உரிமைத் தொகை உள்ளிட்ட சிறப்பான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இந்த மக்கள் நலத்திட்டங்கள் தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என்றார்.
தொகுதியின் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பெண்களுக்கான பிரத்யேக திட்டங்களை பட்டியலிட்டு அவர் வாக்கு சேகரித்த விதம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. பிரசாரத்தின் போது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.





