ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் போன பிறகுதான் கட்சியே ஆரம்பிச்சிருக்கேன் – தவெக தலைவர் விஜய்
காமராஜர் மாதிரி, எம்.ஜி.ஆர். மாதிரி யாரும் வர மாட்டார்களா? என நீங்கள் ஏங்குவது எனக்கு தெரியும். அதற்காகத்தான் தவெக வந்துள்ளது” என நெல்லை பரப்புரையில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தெரிவித்தார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோ நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்துள்ளார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாகவே சுமார் 30 கிமீ தொலைவுக்கு பயணித்து கேடிசி நகர் பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும் திருநெல்வேலி மக்களுக்கு வணக்கம்” எனக் கூறி பேச்சைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய விஜய், “உங்களை தேடி வந்திருக்கிறேன். திமுக கையில் முழு அதிகாரம் இருந்திருந்தால் இந்நேரம் இந்த நிகழ்வு நடந்திருக்காது. ஏதாவது முட்டுக்கட்டை போட்டிருப்பார்கள்.
அதிகாரம் இல்லாத முதலமைச்சர் ஸ்டாலின். திமுக அரசு நமக்கு எவ்வளவு நெருக்கடிகள், அவதூறுகள் செய்தார்கள். திமுக கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் வெளியே தான் தனித்தனியாக இருப்பார்கள். ஆனால் உள்ளுக்குள் ஒன்றாக இருப்பார்கள். அவர்களுக்கு ஒரே நோக்கம் தான். அது மக்களுக்காக உழைக்க விஜய் வந்துவிடக்கூடாது என்பதே. நான் வந்ததால் அவர்களால் ஊழல் செய்ய முடியாமல் போனது. அதனால் என் மீது செம்ம கோபத்தில் இருக்கிறார்கள்.
அவர்களின் கூட்டணி கணக்கு எல்லாம் கலகலத்துப் போய் உள்ளது. கூட்டணி கட்சிக்காரர்கள் அவர்களுக்காகவே ஓட்டுப் போட மாட்டார்கள் போல அந்த அளவுக்கு உள்ளது திமுகவின் நிலைமை. அதைவிட பாஜக தலைமையிலான மற்றும் பலர் கூட்டணியின் நிலை உள்ளது. திமுக ஆட்சிக்கு வர முடியாத நிலையை மக்களே ஏற்படுத்திவிட்டார்கள்.
சில பல கோடிகளைக் கொடுத்து காங்கிரஸ் கட்சியை தனது பைக்குள் போட்டுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். உண்மையான காங்கிரஸ் எங்கள் பக்கம் உள்ளது. அதனால் தான் திமுக, பாஜக கூட்டணிக்கு என் மீது காண்டு. ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்ற பிறகு தான் நான் கட்சியை ஆரம்பித்தேன். மற்றவர்களுக்கு தான் இது எலெக்சன். ஆனால் எனக்கும் என்னுடன் இருப்பவர்களுக்கும் இது எமோஷன். மக்களுக்கு ஒன்று என்றால் எனக்கும், எனக்கு ஒன்று என்றால் மக்களுக்கும் கண் கலங்கும். கரூர் விஷயத்தில் என்ன நடந்தது என்பதே அனைவருக்கும் தெரியும். ஆனால் பழி மட்டும் என் மீது போட்டார்கள். அது மக்களிடம் எடுபடவில்லை. ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை முடக்கினால் என்னை முடக்கிவிடலாம் எனக் கனவு கண்டார்கள். அது நடக்கவில்லை.
விஜய்க்கும் மட்டும் தனியாக SOP எனக் கட்டுப்பாடு. நான் மக்களைச் சந்திக்க இந்தக் கட்டுப்பாடு போட்டார்கள். அதுவும் மக்களிடம் எடுபடவில்லை. தேர்தல் நேரம் என்பதால் மற்றொரு அவதூறு. அது என்னவென உங்களுக்கே தெரியும். அதுவும் மக்களிடம் எடுபடவில்லை. எந்த கொம்பனாலும் மக்களிடம் இருந்து விஜய்யை பிரிக்க முடியாது. அதனால் 234 தொகுதிக்கும் விஜய் தான் வேட்பாளர் என்றேன். இப்படிப்பட்ட எமோஷனலான தேர்தலை தமிழ்நாடு அல்ல இந்தியாவே பார்த்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் வழக்கமான தேர்தல் இது இல்லை. இது ஒரு அதிசய தேர்தல்.
ஒரு காமராஜர், ஒரு எம்.ஜி.ஆர். தானா என மக்கள் ஏங்கியது எனக்கு தெரியும். அதனை மனதில் வைத்துத்தான் தவெக வந்தது. இந்த தேர்தலில் தவெக ஆட்சி அமைக்கிறோம். தவெக ஆட்சியில் பெண்கள், இளைஞர்கள் எல்லோரும் நன்றாக இருப்போம். அதனால் பார்த்து பார்த்து வாக்குறுதிகளை தவெக அளித்துள்ளது. மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட எடுக்க வேண்டிய அவசியமே எனக்கு இல்லை. இதனை இப்போது ஆள்பவர்கள், இதற்கு முன் ஆண்டவர்கள் சொல்ல முடியுமா?.
இரண்டரை வயது சிறுமியை திமுக நிர்வாகி கொலை செய்தானே அதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார். ஐந்து வருடமாக போலீஸ் துறையை வைத்து என்ன செய்தீர்கள். ஆட்சி சிறப்பாக இல்லை என்பதால் தான் போதைப்பொருள் புழக்கம் அதிகமாகியுள்ளது. நாங்குநேரி சம்பவத்தை ஏன் தடுக்கவில்லை. இது மட்டுமா மணல் திருட்டு, சட்டவிரோத கல்குவாரி, குடும்பமாக கொள்ளை அடிப்பது என ஆட்சியை நாறிப் போயுள்ளது. ஆட்சி முழுவதும் ஊழல் மலிந்து போயுள்ளது. எந்த முகத்தை வைத்து ஓட்டுக் கேட்பீர்கள். உங்கள் பணத்தை வைத்து இந்த தேர்தலில் ஒன்றும் செய்ய முடியாது. இது மாற்றத்திற்கான தேர்தல். ஒட்டுமொத்த மக்களாலும் மாற்றத்தை கொண்டுவரக்கூடிய தேர்தல்.
அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு, வசதியான வாழ்க்கையை விட்டு மக்களுக்காக வந்துள்ளேன். தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டியெல்லாம் இல்லை. இருமுனைப் போட்டி தான். ஒன்று திமுக, இன்னொன்று தவெக” என்று பேசினார்.






