மொட்டை அடித்து, மிளகாய் மாலை அணிந்து… 50வது முறையாகக் களம் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த 68 வயது முதியவர் நூர் முகமது, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மொட்டை அடித்து, மிளகாய் மாலை அணிந்து 50-வது முறையாக தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த நூர் முகமது, இம்முறை மிகவும் வித்தியாசமான முறையில் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். சிறுவண்டி ஒன்றில் கயிறுகட்டி இருவர் இழுத்துவர, மொட்டை அடித்து, கழுத்தில் மிளகாய் மாலை அணிந்து, கையில் பிச்சை பாத்திரத்துடன் வந்து தனது வேட்புமனுவை வழங்கினார். மனுத் தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது இந்த வினோதத் தோற்றத்திற்கான காரணத்தை விளக்கினார்.
தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் நம்மிடம் ஓட்டுப்பிச்சை கேட்டு வருவார்கள். ஆனால், வெற்றி பெற்ற பிறகு அவர்கள் நம்மையே பிச்சை காரர்களாக்கி விடுவார்கள். மக்கள் பணத்திற்காக ஓட்டு போடாமல் நல்லவர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இல்லையெனில், நம் தலையில் மிளகாய் அரைத்து, நம்மை பிச்சை எடுக்க வைத்துவிடுவார்கள் என்பதை உணர்த்தவே இந்த வேடம் அணிந்தேன். நூர் முகமது இதற்கு முன்பும் பலமுறை வினோதமான முறைகளில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டபோது, சுடுகாட்டிலிருந்து மண் சட்டி எடுத்து வந்து அதை உடைத்து, ஓட்டுக்கு பணம் வாங்கினால் அது நம் இறுதிச்சடங்கிற்குச் சமம் என எச்சரித்தார். இதற்கு முன்பு ராஜா வேடத்தில் குதிரையில் வந்தும், விவசாயியாக ஏர் கலப்பையுடனும், சவப்பெட்டியுடனும் வந்து மனுத்தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
1997-ம் ஆண்டு மாநகராட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு கவுன்சிலராகப் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. ஜனாதிபதி தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை இதுவரை 48 முறை போட்டியிட்டுள்ள இவர், தற்போது 50-வது முறையாகக் களம் காண்கிறார். இந்த விழிப்புணர்வுப் பணிகளுக்காக இதுவரை சுமார் 8 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
கல்வி, மருத்துவம் மக்களுக்கு இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களுக்கு மக்கள் அடிமையாகக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மாற்றத்தை உருவாக்கும் சக்தி மக்களிடமே உள்ளது என்பதால், மக்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.





