பெரம்பூரில் தொடக்கம்: மார்ச் 28-ல் களமிறங்கும் விஜய்
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரும் மார்ச் 28-ஆம் தேதி பெரம்பூரில் இருந்து தனது புயல் வேகப் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்குவதற்காக தவெக சமர்ப்பித்திருந்த 20 பேர் கொண்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்தப் பட்டியலில் கட்சித் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்ராஜ், சி.டி.ஆர். நிர்மல் குமார், நாஞ்சில் சம்பத் மற்றும் ராஜ்மோகன் உள்ளிட்ட முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இது அக்கட்சிக்குக் கிடைத்துள்ள முதல் வெற்றியாகக் கருதப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, வரும் மார்ச் 28-ஆம் தேதி (நாளை மறுநாள்) சென்னை பெரம்பூரில் இருந்து விஜய் தனது முதல் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடக்கூடும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில், அங்கு ஏற்கனவே பிரம்மாண்டமான தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டு வருகிறது. பிரச்சாரத்தின் போது, கொடுங்கையூர் மற்றும் மூலக்கடை போன்ற பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து விஜய் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.
முதல் நாளிலேயே ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கவர் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். மார்ச் 28 காலை 9 மணிக்கு நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்படும் அவர், பின்வரும் நேரங்களில் அந்தந்த பகுதிகளில் உரையாற்றுகிறார்.
காலை 10:00 மணி: பெரம்பூர் (எம்.கே.பி நகர்)
மதியம் 01:00 மணி: கொளத்தூர்
மதியம் 02:00 மணி: வில்லிவாக்கம்
மாலை 03:00 மணி: அண்ணா நகர்
மாலை 04:00 மணி: விருகம்பாக்கம்
ஒவ்வொரு இடத்திலும் சுமார் 3,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி தவெக நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளித்துள்ளனர்.
இதற்கிடையே, நாளை மார்ச் 27-ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக விஜய் அறிமுகம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாநிலம் தழுவிய தனது முழுமையான பிரச்சாரத் திட்டத்தையும் அவர் நாளை அறிவிக்க உள்ளார்.






