--- --:--:-- --

பள்ளி வளாகத்தில் கார் மோதி 4 வயது சிறுமி பலி..!

9

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, தனியார் பள்ளி வளாகத்தில் கார் மோதி 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரமடைந்த உறவினர்கள் தனியார் மருத்துவமனையை அடித்து நொறுக்கியதால் அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

புளியங்குடி சிந்தாமணி பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில், நெற்கட்டும்செவல் பகுதியைச் சேர்ந்த மாரிசாமி என்பவரின் மகள் சிவ யாழினி (4) யு.கே.ஜி பயின்று வந்தார். நேற்று, முள்ளிகுளத்தைச் சேர்ந்த ராம்காந்த் என்பவர் பள்ளி நிர்வாகியை சந்திக்க தனது காரில் பள்ளிக்கு வந்துள்ளார்.

 

சந்திப்பு முடிந்து அவர் தனது காரை பின்னோக்கி (Reverse) எடுத்தபோது, எதிர்பாராதவிதமாக அங்கு நின்றிருந்த சிறுமி சிவ யாழினி மீது கார் மோதியது. விபத்தில் படுகாயமடைந்த சிறுமியை பள்ளி ஊழியர்கள் மீட்டு, அப்பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

சிறுமியின் மரணம் குறித்துத் தகவல் தெரிவிக்காமல், அவருடைய புத்தகப் பையை மட்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. சக மாணவர்கள் மூலமே விபத்து குறித்து அறிந்த பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். குழந்தையின் உயிரிழப்பு குறித்து தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிறுமியின் பெற்றோரும் பொதுமக்களும் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. நேரில் வர வேண்டும் என வலியுறுத்தி இரவு வரை போராட்டம் நீடித்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

 

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த உறவினர்கள், பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான மருத்துவமனையின் முகப்பு கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி. மாதவன், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

 

சிறுமியின் உடல் உடற்கூராய்வுக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சிசிடிவி (CCTV) காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காரை ஓட்டிச் சென்ற 2 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காரினை ஓட்டிச் சென்ற நபர் மதுபோதையில் இருந்ததாகவும், சுய நினைவின்றி குழந்தையின் மீது காரை மோதியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்கப் புளியங்குடி பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Right Menu Icon