இந்தியாவில் முதல் முறையாக கருணைக் கொலை..!
13 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இளைஞர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின் கருணைக் கொலை மூலம் காலமானார். சண்டிகரை சேர்ந்த ஹரீஷ் ராணா கடந்த 2013ஆம் ஆண்டு தனது விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் மூளைப் பகுதியில் பலத்த காயமடைந்தார்.
இந்த விபத்தில் அவரது மூளையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் Persistent Vegetative State எனப்படும் ‘மீள முடியாத கோமா’ நிலைக்குச் சென்றார். கடந்த 13 ஆண்டுகளாக அவருக்கு உடல் இயக்கங்கள் ஏதுமின்றி, ஒரு குழாய் வழியாக வழங்கப்படும் திரவ உணவு மற்றும் நீர் மூலமே உயிர் காக்கப்பட்டு வந்தது.
ஏறத்தாழ 13 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த நிலையில், அவரை கருணைக் கொலை செய்ய அனுமதிக்குமாறு ராணாவின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜேபி பரிதிவாலா, கேவி விஸ்வநாதன் அமர்வு, நாட்டிலேயே முதல் முறையாக ஹரீஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய அனுமதித்தது.
இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஹரீஷ் ராணா கொண்டு செல்லப்பட்டு அவருக்கு வழங்கப்பட்டு வந்த உயிர் காக்கும் கருவிகளின் உதவி நிறுத்தப்பட்டது. மேலும், குழாய் மூலம் ஹரீஷ் ராணாவுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு உள்ளிட்டவை அடுத்தடுத்து நிறுத்தப்பட்டன. இந்நிலையில், சுமார் 10 நாட்களுக்குப் பிறகு நீண்ட போராட்டத்திற்கு பின் ஹரீஷ் ராணா உயிரிழந்தார்.
இந்தியாவில் ஒரு தனிநபருக்குச் சட்டப்பூர்வமாக ‘கருணைக் கொலை’ நடைமுறைப்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஹரீஷின் தந்தை அசோக் ராணா ஒரு ஹோட்டலில் கேட்டரிங் வேலை செய்து வந்தவர். மகனின் மருத்துவச் செலவுக்காக டெல்லியில் இருந்த தங்களது சொந்த வீட்டை விற்றுவிட்டு, காசியாபாத்தில் உள்ள ஒரு சிறிய வாடகை வீட்டிற்கு இடம்பெயர்ந்தனர். கடந்த 13 ஆண்டுகளாக ஒரு நாள் கூட அவரது பெற்றோர் அவரைத் தனியாக விட்டதில்லை. படுத்த படுக்கையாக இருப்பதால் ஏற்பட்ட புண்களை பராமரிப்பது முதல் உணவுக் குழாயைச் சுத்தம் செய்வது வரை அனைத்தையும் அவர்களே செய்து வந்தனர்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் ஹரீஷின் பெற்றோரை நேரடியாகச் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் அடைந்த வேதனையை உணர்ந்த நீதிபதிகள், இது வெறும் மரணம் அல்ல, “கண்ணியமான விடைபெறல்” என்று குறிப்பிட்டு கருணைக் கொலைக்கு அனுமதி அளித்தனர். இந்த உத்தரவை அடுத்து சில நாட்களுக்கு முன்பு, ஹரீஷ் வீட்டில் பிரம்மகுமாரிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்து சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். அவர் அமைதியாக விடைபெறவும், ஆன்மா சாந்தியடையவும் செய்யப்பட்ட இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.






