வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை..!
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான வேளச்சேரி மற்றும் பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் போக்குவரத்து மார்ச் 14 முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. இது தொடர்பான விரிவான அறிவிப்பை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ளது.
கடந்த 5-ஆம் தேதி, டெல்லியில் இருந்து வந்த ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஜனக்குமார் கர்க் தலைமையிலான குழுவினர், இந்த வழித்தடத்தில் ரயிலை இயக்கி முறையான சோதனைகளை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில் பாதுகாப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இப்பாதையில் ரயில்களை இயக்க தற்காலிக அதிகாரப்பூர்வச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை மெட்ரோ ரயில் உள்கட்டமைப்பின் மேல் அமைந்துள்ள சில பகுதிகளில் சாரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றும் வகையில், இப்பணிகளை முடிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் கோரிய கால அவகாசத்திற்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தன. இதன் மூலம், பாதுகாப்பான பயணத்திற்கான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும் தற்போது தயார் நிலையில் உள்ளன.
புதிய அறிவிப்பின்படி, இந்த வழித்தடங்களில் தினமும் மொத்தம் 96 ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை இருமார்க்கமாகவும் 86 சேவைகள் இயக்கப்படும். சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இருமார்க்கமாகவும் 4 சேவைகள் இயக்கப்படும். பரங்கிமலை முதல் வேளச்சேரி வரை இருமார்க்கமாகவும் 6 சேவைகள் இயக்கப்படும்.
இந்த புதிய இணைப்பின் மூலம் சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரையிலான பயணம் இனி எளிதாகப் போகிறது. இது சென்னை புறநகர் மற்றும் மாநகரப் பகுதி பயணிகளுக்கு ஒரு மிகச்சிறந்த போக்குவரத்து மாற்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





