அடுத்த முகூர்த்தத்திற்கு திருமண சாப்பாடு கிடைக்குமா.?
இந்தியாவில் வணிக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இது திருமண நிகழ்ச்சிகளைப் பெரிய அளவில் பாதிக்கும் என தமிழ்நாடு கேட்டரர்ஸ் கூட்டமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்த அமைப்பின் நிர்வாகிகள், அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது பேசிய தமிழ்நாடு கேட்டரர்ஸ் கூட்டமைப்பின் தலைவர் மாதம்பட்டி நாகராஜ், எரிவாயு தட்டுப்பாட்டால் இத்துறை எதிர்கொள்ளும் நெருக்கடிகளைப் பட்டியலிட்டார். அவர் கூறியதாவது: “திருமண மண்டபங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு உணவுகளைத் தயாரிக்க பெரும்பாலும் எரிவாயு சிலிண்டர்களையே நம்பியிருக்கிறோம். ஆனால் தற்போது தட்டுப்பாடு காரணமாகத் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் தட்டுப்பாடு நிலவினாலும், மறுபுறம் கிடைக்கும் சில சிலிண்டர்களின் விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் பழைய விலைக்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், கூடுதல் விலை கொடுத்து சிலிண்டர் வாங்கிச் சமைப்பது கேட்டரர்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
எரிவாயுவுக்குப் பதிலாக விறகு அடுப்புகளைப் பயன்படுத்தலாம் என்றால், விறகின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், விறகு அடுப்பைக் கொண்டு அனைத்து வகையான உணவுப் பதார்த்தங்களையும் குறிப்பிட்ட நேரத்தில் சமைக்க இயலாது.
வரவிருக்கும் முகூர்த்த நாட்களில் உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்படக்கூடாது என்பதற்காக, திருமண வீட்டாருக்கு ஒரு வேண்டுகோளையும் அவர் விடுத்துள்ளார். திருமண ஆர்டர்கள் கொடுப்பவர்கள் தற்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, அதிக எரிவாயு தேவைப்படும் துரித உணவுகள் (Fast Food), தோசை, பூரி மற்றும் புரோட்டா போன்ற உணவுப் பொருட்களைத் தவிர்த்துவிட்டு மற்ற உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வணிக சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு தொடர்ந்தால், அடுத்தடுத்த முகூர்த்த நாட்களில் திருமண மண்டபங்களில் உணவு வழங்க முடியாத அவல நிலை ஏற்படும். எனவே, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அரசு தங்களையும் “அத்தியாவசியப் பயனீட்டாளர்கள்” பட்டியலில் சேர்க்க வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களைப் போலவே, கேட்டரிங் தொழிலுக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத சிலிண்டர்களை ஒதுக்கீடு செய்து தடையின்றி வழங்க வேண்டும் என தமிழ்நாடு கேட்டரர்ஸ் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.






