சர்க்கரை நோயால் கைதி கால் இழந்த விவகாரம்..!
தமிழக சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவர், சர்க்கரை நோயின் தீவிரத்தால் தனது காலை இழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து கைதிகளுக்கும் இனிப்பு இல்லாத காபி மற்றும் டீ வழங்க அனைத்து சிறை அதிகாரிகளுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் மனிதாபிமானத்துடன் உத்தரவிட்டுள்ளது.
“கைதியும் ஒரு மனிதர்தான். அவர் முழுமையாக சிறை அதிகாரிகளின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டில் இருக்கிறார். எனவே, மாற்றுத்திறனாளி கைதிகளின் சிறப்புத் தேவைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக்க வேண்டிய கடமை அதிகாரிகளுக்கு உள்ளது. இத்தகைய வசதிகளைக் கோரி பாதிக்கப்பட்ட கைதிகள் நீதிமன்றத்தை நாட முடியும்,” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதியான தனது தந்தைக்கு, காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் 28 நாட்கள் சாதாரண விடுப்பு (Leave) வழங்கக் கோரி ஒரு பெண் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் ஆர். கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
“சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட கைதிகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் தேவைப்பட்டால் இன்சுலின் சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும். சர்க்கரை நோயாளிகளாக அடையாளம் காணப்படும் கைதிகளுக்கு முறையான உணவைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். உதாரணமாக, அவர்களுக்கு வழங்கப்படும் காபி அல்லது டீ சர்க்கரை இல்லாததாக இருக்க வேண்டும்,” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
மனுதாரரின் தந்தை பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு ஏற்பட்ட சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாக, சமீபத்தில் அவரது வலது கால் துண்டிக்கப்பட்டது (Amputation). தனது தந்தையின் உடல்நிலை மோசமடைந்து வருவதாலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் குணமடையவும், முறையான பராமரிப்பு பெறவும் அவருக்கு 28 நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார். முன்னதாக, சிறை அதிகாரிகள் இந்தக் கோரிக்கையை நிராகரித்ததால், அவர் நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கில் கால் துண்டிக்கப்பட்ட கைதிகள் குறித்து நீதிமன்றம் அதிக கவனம் செலுத்தியது. “மனுதாரரின் தந்தை சிறையில் இருந்தபோதே, சர்க்கரை நோயின் நேரடி விளைவாகத் தனது காலை இழந்துள்ளார். அவரது பாதிப்பு ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு, முறையான மருத்துவ சிகிச்சையும் உணவு முறையும் வழங்கப்பட்டிருந்தால், அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது,” என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
மேற்கத்திய கழிப்பறை (Western Toilet): இரவு நேரங்களில் கைதிகள் தங்களது அறையை விட்டு வெளியே வர முடியாது என்பதால், மாற்றுத்திறனாளி கைதிகளின் அறையிலேயே மேற்கத்திய கழிப்பறை வசதி அல்லது ‘கமோட்’ (Commode) வசதி செய்து தரப்பட வேண்டும்.
மனுதாரரின் தந்தை ஒரு முதியவர் என்பதால், கழிப்பறை மற்றும் உணவருந்தும் இடத்திற்கு எளிதாகச் செல்லும் வகையில் அவருக்கு அறை ஒதுக்கப்பட வேண்டும். அவருக்கு உதவி செய்ய மற்றொரு கைதியை உதவியாளராக நியமிக்கலாம்; அந்த உதவியாளரின் பணி அவரது அன்றாட சிறைப் பணியாகக் கணக்கிடப்பட வேண்டும்.
மருத்துவப் பரிசோதனை: கால் துண்டிக்கப்பட்ட இடத்தில் புண்கள் (Ulcers) ஏற்பட வாய்ப்புள்ளதால், அவருக்குத் தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். அவருக்குத் தேவையான சக்கர நாற்காலி அல்லது ஊன்றுகோல் போன்ற கருவிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
மாஸ்டர் ஹெல்த் செக்-அப்: நோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து கால் இழப்பு போன்ற பாதிப்புகளைத் தவிர்க்க, பாளையங்கோட்டை சிறையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை (Master Health Check-up) நடத்த வேண்டும்.
1982-ஆம் ஆண்டின் தமிழ்நாடு தண்டனை இடைநீக்க விதிகளின் (Tamil Nadu Suspension of Sentence Rules) கீழ், மனிதாபிமான அடிப்படையில் இந்த விடுப்பு கோரப்பட்டது. இதனையடுத்து, மனுதாரரின் தந்தை தொடர்பான முந்தைய சட்ட உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.






