விளக்கத்தை சொல்கையில் விளைவுகளும் அநாகரிகமாக அரங்கேறும் – பார்த்திபன்
சமீபத்தில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ஒரு தனியார் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போது பலரது புகைப்படங்களை காட்டி அவர்களைக் குறித்து ஏதாவது சொல்லுமாறு கேட்டனர். அப்போது திரிஷாவின் புகைப்படம் காட்டப்பட்டபோது அவர், “குந்தவை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது. அவங்க வெளியே வந்தால் பிரச்னைகள் வருகின்றன” என்று கூறியிருந்தார்.
திரிஷா ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததை குறிப்பிட்டு அவர் சொல்லியிருந்தார். ஆனால் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பை சந்தித்தது. அதுமட்டுமல்லாமல், நடிகை திரிஷாவும் பார்த்திபன் கருத்திற்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். திரிஷாவின் இந்த பதிவுக்குப் பிறகு பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் ஒரு வாய்ஸ் ரெக்கார்டு வெளியிட்டு வருத்தம் தெரிவித்தார்.
இதற்குப் பிறகும் சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் குறித்து பலரும் தொடர்ந்து பேச ஆரம்பித்தனர். சிலர் பார்த்திபன் வருத்தம் தெரிவிக்கவே கூடாது என்று கூட கருத்து பதிவிட்டனர். இதையடுத்து பார்த்திபன் மீண்டும் ஒரு புதிய காணொளியை வெளியிட்டு இந்த விவகாரம் குறித்து விரிவாக பேசினார்.
அந்த வீடியோவில், “ஒரு நிகழ்ச்சியில் நான் விஜய், அஜித் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென திரிஷாவின் புகைப்படத்தை காட்டினார்கள். அதை பார்த்ததும் என்ன பேசுவது என்று எனக்கு தெரியாமல் திகைத்துவிட்டேன். நான் திட்டமிட்டு அவர் புகைப்படத்தை போட்டு பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்று சொல்வது பொய். அப்படி நான் பணம் வாங்கிக்கொண்டு எந்த நிகழ்ச்சிக்கும் செல்ல மாட்டேன். தவறும் செய்ய மாட்டேன்.
கரூர் பிரச்னையில் கூட விஜய்க்கு விமர்சனங்கள் வந்தன. ஆனால் இந்த அளவுக்கு பாதிப்பு வரவில்லை. இந்த அளவுக்கு பாதிப்பு வர காரணமான பெண்மணி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பது என் மனதில் இருந்த ஆதங்கம். ஆனால் அதை சொல்லுவதற்காக அந்த மேடைக்கு நான் செல்லவில்லை. நான் எப்போதும் பிரச்னைகளை விரும்பாதவன். அந்த வீடியோவை நீக்க சொல்லியும் இருந்தேன்.
ஆனால் அது வேறு வழியில் வெளியாகிவிட்டது. நான் ஒரு மூன்றாவது நபரைப் பற்றித்தான் பேசினேன். ஆனால் அதை பெண்களுக்கு எதிராக பேசினேன் என்று கூறுகிறார்கள். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஒரு மூன்றாவது நபரின் மூன்றாம் தரமான பதிவால்தான் நான் இதை மீண்டும் பேச வேண்டிய நிலை ஏற்பட்டது. அவரைப் பற்றி பொதுவெளியில் ஏராளமான விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்கெல்லாம் அவர் பதில் சொல்லவில்லை. எனக்கு மட்டும் பதில் சொல்கிறார். நீங்கள் ஏன் வருத்தம் தெரிவித்தீர்கள் என்று என்னிடம் கேட்கும் நண்பர்களும் இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இதே விஷயம் குறித்து பார்த்திபன் மீண்டும் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரே வீடியோவில் பதிவானதை, நீளம் கருதி ரெண்டாகப் பகிர்கிறேன். மற்றெதையும் ரெண்டாக்க அல்ல! என் பக்க விளக்கத்தை சொல்கையில் பக்க விளைவுகளும் அநாகரிகமாக அரங்கேறும் என்பதை அறிந்தும் (already started) ஆனால் இதைப்பற்றி இனி நான் பேசப்போவதில்லை. இதோடு முடித்துக் கொள்வதே நமக்கு நல்லது. நன்றி!” என்று குறிப்பிட்டிருந்தார்.
கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது என்கிற தலைப்பில் பார்த்திபன் வெளியிட்டுள்ள வீடியோவில், “இவ்வளவு கசப்பான சம்பவங்களுக்கு பிறகும் திரிஷாவுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களும், பாராட்டுகளும். விஜய்யின் வளர்ச்சி அபாரமானது.” என்று பேசியிருந்தார்.






