--- --:--:-- --

வானில் இருந்து விழுந்த சவப்பெட்டி..!

6

தொல்லியல் கண்டுபிடிப்புகள் எப்போதும் நிலத்தைத் தோண்டும்போதோ அல்லது குகைகள் மற்றும் பாதாளக் கல்லறைகளில் இருந்தோ கிடைப்பதில்லை. சில நேரங்களில் அவை வானத்திலிருந்து விழுவது போலவும் அமையும். 1899-ஆம் ஆண்டு, போலந்தின் பாகிச் (Bagicz) கிராமத்திற்கு அருகிலுள்ள பால்டிக் கடல் பகுதி குன்றிலிருந்து ஒரு சவப்பெட்டி கீழே விழுந்தது. யாரும் எதிர்பார்க்காத அந்தப் பெட்டி, ஒரு ஓக் மரத்தின் தண்டுப் பகுதியை குடைந்து செய்யப்பட்டிருந்தது.

 

அந்தப் பெட்டிக்குள் பண்டைய வீல்பர்க் (Wielbark) கலாச்சாரத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணின் எலும்புகள் இருந்தன. அவர் அந்தச் சமூகத்தின் உயர் அடுக்கைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மேலும், வெண்கலத்தாலான ஆடை ஊசி, கண்ணாடி மற்றும் அம்பர் (amber) மணிகளால் ஆன மாலை, ஒரு மார்பு ஆபரணம் மற்றும் வெண்கலக் காப்புகள் இருந்தன.

 

காலப்போக்கில், அந்தப் பெண்ணும் அவரது சவப்பெட்டியும் ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டனர். 1980-களில் தொல்லியல் ஆய்வாளர்கள் மீண்டும் அந்த சவப்பெட்டியை ஆராயும் வரை அது மறக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. இந்நிலையில், அண்மைக் கால ஆய்வுகள் சில ஆச்சர்யமான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன.

 

அந்தப் பெண் ஒரு இளவரசியோ அல்லது முக்கிய குடும்பத்தை சேர்ந்தவரோ கிடையாது. போலந்தின் ‘ரோமானிய இரும்புக்கால’ மற்ற புதைகுழிகளைப் போலவே இதுவும் இருந்ததால், அவர் ஒரு சாதாரணப் பெண்ணாகவே இருக்கக்கூடும் என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர் ஏன் தனியாகப் புதைக்கப்பட்டார் என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது.

 

உண்மையில் அவர் தனியாகப் புதைக்கப்படவில்லை. கடல் அரிப்பினால் குன்று சரிந்தபோது, அவரது சவப்பெட்டி மட்டும் வெளியே விழுந்திருக்கிறது. இதனால் அவர் தனியாகப் புதைக்கப்பட்டது போன்ற ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கி.பி. 2-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தவை என கணிக்கப்பட்டாலும், அந்தப் பெண்ணின் பற்களை ஆய்வு செய்தபோது அவை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்தவை எனத் தெரிந்தது.

 

இந்தச் சவப்பெட்டி இவ்வளவு நேர்த்தியாகப் பாதுகாக்கப்பட்டிருப்பது இன்னும் அரிதான ஒன்றாகும். உயிரியல் பொருட்கள் சிதைவடைவதைத் தடுத்த ஆக்சிஜன் அற்ற (anoxic) சூழல் நிலவியதால் இது சாத்தியமானது. மரத்தின் ‘சாப்வுட்’ பகுதியை மாதிரியாகக் கொண்டு, அதன் வளர்ச்சி வளையங்களின் அகலம் மற்றும் மொத்த ஆண்டு வளர்ச்சி வளையங்களை அளவிட்டதன் மூலம் இந்த மரம் கி.பி. 112 முதல் 128-க்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon