புதுச்சேரியிலும் முன்கூட்டியே 2 மாத உரிமைத் தொகை வரவு..!
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் குடும்பத் தலைவிகளுக்கு இரண்டு மாத காலத்திற்கான உதவித்தொகை ரூ. 5,000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று கவர்னர் மாளிகை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அரசின் சார்பில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும், அரசின் வேறு எந்தவொரு உதவித்தொகையும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 63 ஆயிரம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
அண்டை மாநிலமான தமிழகத்தில் பெண்களுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது. அங்கு கடந்த பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை ரூ. 3,000 மற்றும் கோடைகால இடர்பாடுகளை எதிர்கொள்ள வழங்கப்பட்ட ரூ. 2,000 என மொத்தம் ரூ. 5,000 கடந்த மாதம் வழங்கப்பட்டது. இது தமிழகப் பெண்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்த நிலையில், புதுச்சேரியிலும் இது போன்ற நடைமுறை வருமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், புதுச்சேரி கவர்னரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், “புதுச்சேரி குடும்பத் தலைவிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 63 ஆயிரம் பெண்களுக்கு அரசு வழங்கி வரும் மாதாந்திர உதவித்தொகை, இரண்டு மாதங்களுக்குச் சேர்த்து ரூ. 5,000 (மாதம் ரூ. 2,500 வீதம்) அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பதிவில் கவர்னர் கைலாஷ்நாதன் குறிப்பிடுகையில், ஒரு குடும்பத்தின் முன்னேற்றமும் மகிழ்ச்சியும் அந்த வீட்டின் பெண்ணின் கைகளிலேயே உள்ளது என்றும், பெண்கள் வெறும் குடும்பத் தலைவிகள் மட்டுமல்ல, சமூகத்தை வழிநடத்தும் ஆளுமைகள் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். பெண்களின் பொருளாதார சுதந்திரமே சமூக முன்னேற்றத்தின் அடையாளம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த இரண்டு மாத நிதி உதவி பெண்களின் சுயசார்பு வாழ்வுக்கு ஒரு சிறு ஊக்கமாக அமையும் என்றும் பதிவிட்டுள்ளார்.





