டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி–II மற்றும் IIA) பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது.
தேர்வு மைய ஒதுக்கீடு குளறுபடியால், தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 9ம் தேதி நடைபெற இருந்த குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதால் தேர்வர்கள் ஏமாற்றமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தேர்வர்களுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அதைத்தொடர்ந்து தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று மாநிலம் முழுவதும் குரூப்-2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். வரும் 22 ஆம் தேதி குரூப் 2 பதவிகளுக்கான பாடத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் சண்முக சுந்தரம் தெரிவித்தார்.
தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களது ஒருமுறை பதிவுத் தள (OTR) கணக்கில் உள்நுழைந்து, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தேர்வுக்கான நாளில், பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் தேவையான அடையாள ஆவணத்தையும் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், இணையதளத்தின் மூலம் மட்டுமே அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும் என்றும் தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.






