இரட்டை இலை சின்னம் வென்று முதலில் ஆட்சி அமைத்தது எங்கு தெரியுமா?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி மார்ச் மாதம் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தலில் கூட்டணி, தேர்தல் அறிக்கையைவிட ஒவ்வொரு கட்சிக்கும் மிக முக்கியமானது அதன் சின்னங்கள்.
வேட்பாளர்கள் தெரியாமலும், சின்னத்தை வைத்தே வாக்களிக்கும் ஒரு தலைமுறையினர் இன்னமும் தமிழ்நாட்டில் இருந்து வருகின்றனர். அந்த அளவுக்கு தேர்தலில் சின்னம் முக்கியத்துவம் வாய்ந்தது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் புது கட்சிகள் தங்கள் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக சுவர் ஓவியங்கள், சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து அதனை விளம்பரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளில் ஒன்றான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் எப்படி வந்தது.
தமிழ்நாட்டுக்கு முன்னரே அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சி பிடித்த சட்டமன்றத் தேர்தல் எது உள்ளிட்டவை குறித்து நியூஸ்18 இணையத்துக்கு அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை விரிவாக பேசியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது; “திமுகவில் இருந்து 1972ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார். 1973ல் அதிமுகவை தொடங்கினார் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்த ஆறு மாதத்திற்குள் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வந்தது. அப்போது அதிமுக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அதேசமயம் அங்கீகாரம் பெறாத கட்சியாக இருந்தது.
அந்தத் தேர்தலில் அதிமுக இரட்டை இலை சின்னத்தை கேட்காமலேயே தேர்தல் ஆணையம் சுயேச்சை சின்னமாக அந்தச் சின்னத்தை அதிமுகவுக்கு ஒதுக்கியது. அதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் எம்.ஜி.ஆர். ஏற்றுக்கொண்டார்.
அந்தச் சின்னத்தில் தான் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டது. புதிதாக வந்த அதிமுக அந்தத் தேர்தலில், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸையும், மாநிலத்தில் ஆட்சியில் இருந்த திமுகவையும் வீழ்த்தி வென்றது. அதிலும், இந்தத் தேர்தலில் திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி அதிமுக இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றது.
அதன் பின் கோவை மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தை கேட்டுவாங்கி அதிமுக போட்டியிட்டு வெற்றி பெற்றது. இதுவெல்லாம் கட்சி தொடங்கி ஓராண்டுக்குள் நடந்தது. இந்த இரண்டு வெற்றிக்கு பிறகு 1974ஆம் ஆண்டு புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 1977 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தான் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என சிலர் சொல்வார்கள். ஆனால், உண்மையில், 1974 ஆம் ஆண்டே புதுச்சேரியில் ஆட்சியை பிடித்தது அதிமுக.
இதற்கிடையில் கட்சியும், சின்னமும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு 1977ல் தமிழ்நாட்டில் போட்டியிட்டு அதிமுக ஆட்சியை பிடித்து எம்.ஜி.ஆர். முதலமைச்சரானார். அதனைத் தொடர்ந்து 1980, 1984 என தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். தலைமையில் ஆட்சி அமைத்தது. இந்தத் தொடர் மூன்று வெற்றிக்கு காரணம் அவருக்கு கிடைத்த இரட்டை இலை சின்னம் என்றாலும் அது மிகையாகாது.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு ஜா(ஜானகி), ஜெ (ஜெயலலிதா) என இரண்டாக பிளவுப்பட்ட போது 1989 தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அப்போது ஜா அணிக்கு இரட்டை புறா சின்னமும், ஜெயலலிதா தலைமை தாங்கிய ஜெ அணிக்கு சேவல் சின்னமும் கொடுக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் கணிசமான இடத்தில் ஜெ அணி வெற்றி பெற்றது. அதன்பிறகு இரண்டு அணிகளும் ஒன்றுபட்டு ஜானகி அரசியல் இருந்து விலகி, இரட்டை இலை சின்னத்தை ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு கொடுக்கவும் ஒப்புக்கொண்டார்.
அதன்பிறகு 1991ஆம் ஆண்டு தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு பிளவு ஏற்படும்போது நீதிமன்ற வழக்குகளால் மீண்டும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் ஒரு அணிக்கு இரட்டை விளக்கு சின்னமும், ஒரு அணிக்கு தொப்பி சின்னமும் ஒதுக்கப்பட்டது.





