தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகசாசம் நீட்டிப்பு..!
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பிப்ரவரி 9 ஆம் தேதி வரை அவகசாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் தங்களது பெயர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்கு பின் டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 757 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்கள் தங்களது பெயரை சேர்க்க ஜனவரி 18ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர், இதனை மேலும் 12 நாட்கள் நீடித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் தங்களது பெயர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டவர்களின் பெயர்களை, அந்தந்த கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பொதுப்பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் அதில் ஆட்சேபனை உள்ளவர்கள் தங்களின் விவரங்களைச் சமர்ப்பிக்க 10 நாள்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியல் பணிக்கு தேவையான அலுவலர்களை வழங்க வேண்டும் என மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





