நாளை முதல் தமிழகத்தில் பனிக்காலம் ஆரம்பம்..!
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்! தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டங்கள் ஒருபுறம் களைகட்ட, மறுபுறம் இயற்கை அன்னை ஒரு முக்கிய மாற்றத்திற்குத் தயாராகி வருகிறாள். தமிழகத்தில் நீடித்து வந்த வடகிழக்கு பருவமழை நாளை அல்லது நாளை மறுநாள் (ஜனவரி 16 அல்லது 17, 2026) அதிகாரப்பூர்வமாக விடைபெறுகிறது. இதன் பிறகு, தமிழ்நாட்டின் தட்பவெப்பநிலை மாறப்போகிறது. இனி வரும் நாட்களில் குளிரான இரவுகளும், அதிகாலை வேளைகளில் கண்ணை மறைக்கும் மூடுபனியும் (Mist/Fog) நம்மை வரவேற்கும்.
கடந்த காலத் தரவுகளைப் பார்க்கும்போது, பருவமழை விடைபெறுவதில் ஒரு சுவாரசியமான காலமாற்றம் ஏற்பட்டுள்ளது.1871-ம் ஆண்டிலிருந்து உள்ள தரவுகளை ஒப்பிடும்போது, சமீபகாலமாக ஒரு புதிய மாற்றம் தெரிகிறது. முன்பு பொங்கலுக்கு முன்பே பருவமழை முடிந்துவிடும். ஆனால் 2021, 2022, 2024, 2025 மற்றும் இப்போது 2026 எனத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகப் பருவமழை பொங்கல் வரை நீடிக்கிறது.
பொதுவாக ‘லா நினா’ (La Niña) நிலவும் ஆண்டுகளில் கூட இவ்வளவு தாமதம் ஏற்பட்டதில்லை. ஆனால், இப்போது பொங்கல் வரை மழை பெய்வது என்பது ஒரு சாதாரண நிகழ்வாகவே மாறிவிட்டது. இது தமிழகத்தின் பருவநிலை சுழற்சியில் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய மாற்றத்தைக் காட்டுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் 2018-ல் மட்டுமே (ஜனவரி 2, 2019) பருவமழை மிக விரைவாக விடைபெற்றுள்ளது, என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.





