காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது..!
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜனவரி 10 மற்றும் 11இல் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றுதென்கிழக்கு வங்கக்கடல் – பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில், மட்டகிளப்பிற்கு (இலங்கை) கிழக்கு – தென்கிழக்கே சுமார் 790 கிலோ மீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு (இலங்கை) கிழக்கு – தென்கிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 1150 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 1270 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக, கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழகத்தில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 9ஆம் தேதி உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் வரும 10ஆம் தேதி புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஓரிரு இடங்களில் சற்று குறையக்கூடும். ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.






