முட்டைகளில் புற்றுநோய் ஏற்படுத்தும் ஆண்டிபயாடிக்..!
முட்டைகளில், புற்றுநோயை உண்டாக்கக்கூடிய நைட்ரோஃபுரான் (Nitrofuran) என்ற ஒருவித ஆண்டிபயாடிக் இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய அளவில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சென்னையில் இருந்து சுமார் 15 முட்டை மாதிரிகளை சேகரித்துள்ளது.
தெற்கு மண்டலத்திற்கான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI)-ன் பிராந்திய இயக்குநர் வி.கே.பஞ்சாம், தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 25 மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், “பிராண்டட் முட்டைகளின் மாதிரிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டன. இது குறித்து அடுத்த வாரம் அறிக்கைகள் வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுளளார்.
அதே சமயம், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, தாங்கள் மாதந்தோறும் நடத்தும் ஆய்வுகளின்போது நைட்ரோஃபுரான் எதுவும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்தச் சர்ச்சை இருந்தபோதிலும், சென்னையில் முட்டையின் தேவை நிலையாகவே உள்ளது. மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளின்போது முட்டையின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) தலைமைச் செயல்பாட்டு அதிகாரி (COO) எழில்குமார், கூறியுள்ளார்.
முட்டைகளில் நைட்ரோஃபுரான் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் கவலை அளிக்கக்கூடியவை என மருத்துவர்கள் தெரிவித்தாலும், முட்டைகள் இன்னமும் ஒரு முக்கியமான புரத ஆதாரம் என்பதையும் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து பேசிய காவேரி மருத்துவமனையின் இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் பாண்டுரங்கன் பாசுமணி, “முட்டை சாப்பிடுவதை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. அவை உயர்தர புரதம் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்புகளின் முக்கிய ஆதாரமாக உள்ளன,” என்று கூறினார். இதனிடையே எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI)-ன் ஆய்வக அறிக்கைகள் அடுத்த வாரம் வெளிவரும் நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.





