--- --:--:-- --

ஐபிஎல் மினி ஏலம்..!

4

லகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாக்களுள் ஒன்றான ஐபிஎல் தொடர், 19ஆவது முறையாக வரும் மார்ச் 21ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை களைகட்ட உள்ளது. களத்தில் திறம்பட செயல்படுவது மட்டுமல்லாமல் ஏலத்தில் சமயோஜிதமாக வீரர்களைத் தேர்வு செய்வதும்கூட கோப்பையை நோக்கிய பயணத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

 

நாட்டு வீரர்கள் உட்பட 77 வீரர்களை ஏலத்தில் எடுக்க 10 அணிகள் இன்று முட்டிமோதவுள்ளன. வீரர்களுக்கான அடிப்படை ஏலத்தொகை 2 கோடி ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டு வீரருக்கான அதிகபட்ச ஏலத் தொகை 18 கோடி ரூபாயாக உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொருத்தவரை 43 கோடியே 40 லட்சம் ரூபாயை கையிருப்பாக வைத்துள்ள நிலையில், 9 வீரர்களை ஏலத்தில் எடுக்கவுள்ளது.

 

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பை வென்ற இரு அணிகளுள் ஒன்றான சென்னைக்கு, கடந்த ஐபிஎல் தொடர் கசப்பான ஒன்றாகவே அமைந்தது. 14 போட்டிகளில் 10 தோல்விகளை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடமே பிடித்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இம்முறை பெரிய அளவில் மறுசீரமைப்பு செய்ய காத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

ஆல்ரவுண்டர் ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்ற நிலையில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணிக்குள் வந்துள்ளார். இது அணியின் பேட்டிங்கை பலப்படுத்தினாலும், சுழற்பந்து வீச்சு மற்றும் ஆல்ரவுண்டருக்கான இடங்கள் காலியாகவே உள்ளன. சாம் கரண் மற்றும் பதிரனா விடுவிக்கப்பட்டதால் வேகப்பந்துவீச்சையும் பலப்படுத்தவேண்டிய தேவை உருவாகியுள்ளது.

 

நாதன் எல்லீசுக்கு கைகொடுக்கும் விதமாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் அணிக்கு தேவைப்படுவதால் கேமரூன் கிரீன், நோர்க்கியா அல்லது ஜேசன் ஹோல்டரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மிடில் ஆர்டரில் அசத்துவதுடன் சிறந்த பினிஷரும் தேவையாக உள்ளதால் வெங்கடேஷ் ஐயரை ஏலத்தில் எடுக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில் ஜடேஜா மாற்றப்பட்டதால் சென்னை அணிக்கு பலமான சுழற்பந்துவீச்சாளருக்கான தேவை எழுந்துள்ளது. இதனால், அதிரடி பேட்டிங் செய்வதுடன் பந்துவீச்சிலும் கைகொடுக்கும் வகையில் இங்கிலாந்து வீரரான லிவிங்ஸ்டனை ஒப்பந்தம் செய்ய சென்னை அணி கருதும் என கூறப்படுகிறது.

 

இதுமட்டுமல்லாமல் பலமான இடது கை தொடக்கவீரர் ஒருவருடன் இம்முறை களமிறங்கலாம் என சென்னை அணி கருத வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் தென்னாப்பிரிக்க வீரரான குயிண்டன் டி காக்கையும் கூட ஏலத்தில் எடுக்கும் திட்டம் சென்னை அணிக்கு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Right Menu Icon