--- --:--:-- --

கூட்டணி குறித்து ஈபிஎஸ் முடிவெடுப்பார் – நயினார் நாகேந்திரன்

2

தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும், தமிழக தேர்தலில் கூட்டணி குறித்த முடிவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் எடுப்பார் என்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நியூஸ்18-க்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் தெரிவித்தார். அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டார்.

 

டெல்லியில் நடைபெறவுள்ள பெரும்பிடுகு முத்தரையருக்குத் தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செல்வதாகக் கூறிய அவர், தி.மு.க. அரசின் மீதான கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். தி.மு.க. மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 55 மாத தி.மு.க. ஆட்சியில் மக்கள் மிகப்பெரிய அதிருப்தியையும், வெறுப்பையும் சந்தித்து வருவதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.

“தி.மு.க. தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சியாகத் தங்களின் ஆட்சியை நடத்தி வருகிறது. மக்களின் ஆட்சியாக அவர்கள் நடத்தவில்லை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை. கஞ்சா பயன்பாடு, பாலியல் வன்கொடுமைகள் போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதனால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. நிச்சயம் நாங்கள் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் தி.மு.க. அரசு குழப்பமான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும், தாங்கள் அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றத் தவறியதாகவும் நயினார் நாகேந்திரன் விமர்சித்தார். “தி.மு.க. சொன்னதை உடனே செய்யாது; அவர்கள் தங்கள் சுய லாபத்திற்காகவே எதையும் செய்யும் ஆட்சி. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எல்லோருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்றார்கள்.

 

ஆட்சி வந்த பிறகு நாடாளுமன்றத் தேர்தல் வரை திட்டத்தை அறிவிக்கவில்லை” என்று கேள்வி எழுப்பிய அவர், ”அப்போதே வழங்கியிருந்தால் இன்று ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா 36,000 ரூபாய் கிடைத்திருக்கும்” என்று குறிப்பிட்டார்.”முதலில் தகுதி வாய்ந்த பெண் என்று கூறியிருந்தார்கள். தற்போது மீண்டும் 17 லட்சம் பேர் தகுதி வாய்ந்த பெண்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள். எந்த வரையறையின் அடிப்படையில் இந்தத் தகுதியை நிர்ணயிக்கிறார்கள்? தற்போது சேர்க்கப்பட்டுள்ள பயனாளிகளுக்கு, ஆட்சிக்கு வந்ததிலிருந்து கணக்கிட்டு, 55 மாதங்களுக்கான ₹55,000 தொகையை முழுமையாகக் கொடுப்பார்களா என்பதுதான் என்னுடைய கேள்வி” என்று அவர் தி.மு.க.வை நோக்கி வினா எழுப்பினார்.

 

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பா.ஜ.க. தலைமை வகிக்கிறது. ஆனால், தமிழகத்தில் அதிமுக தான் இந்தக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கிறது. எனவே, கூட்டணி குறித்தான முடிவை எடப்பாடி பழனிசாமிதான் முடிவெடுப்பார்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.

Right Menu Icon