--- --:--:-- --

பணம் சுருட்டும் சுகன்யா! குஞ்சங்குளம் கிராம 100 நாள் வேலையில் மோசடி..தொழிலாளர்களை அவதூறாக பேசி அடாவடி.!

GUITUI

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ளது குஞ்சங்குளம் ஊராட்சி. இந்த கிராமத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் எல்லோருக்கும் வேலைவாய்ப்பு தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஆண்டுக்கு 100 நாட்கள் என்பது, 150 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தில் வேலை கிடைத்தால் கிராம மக்களுக்கு பேருதவியாக இருக்கும். ஆனால், அவ்வாறு பணி எதுவும் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ள குஞ்சங்குளம் ஊராட்சி மக்களின் மனக்குமுறல், இப்போது மொத்த மாவட்டத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது. ஏழைக் குடும்பங்களின் பசியைப் போக்க மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்’ (MGNREGS), அதாவது நம் ஊர் மக்களின் பாணியில் சொல்லப்படும் 100 நாள் வேலைத் திட்டம், இங்கே ஒரு சிலரது சுயநலத்தால் திசைமாறிப் போயிருக்கிறது.

 

அடாவடி சுகன்யாவின் ஆதிக்கம்!

கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த, ஆண்டுக்குக் குறைந்தது 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் உன்னதத் திட்டம்தான் இது. ஆனால், குஞ்சங்குளம் கிராமத்தில் உள்ள கீழக்கோட்டை, சீந்திவயல் கிராம மக்கள் இந்தத் திட்டத்தில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

 

“ஆண்டுக்கு 150 நாட்களாக வேலையை அதிகரிக்கலாம்” என்று மத்திய அரசு அறிவித்த போதும், இங்கே இந்த வருடம் இதுவரை கிடைத்தது வெறும் ஒரு வாரம் மட்டுமே! கடந்த வருடமும் இதே நிலைதான். இது, திட்டத்தை செயல்படுத்துவதில் எவ்வளவு அலட்சியம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

 

இதற்குக் காரணமாய் மக்கள் கைகாட்டுவது, இந்தத் திட்டத்தின் பணித்தளப் பொறுப்பாளராக இருக்கும் சுகன்யா என்பவரைத்தான். இவரது பெயரைக் கேட்டாலே உழைக்கும் மக்கள் நடுங்குகிறார்கள். “ஒரு தாய் போல இருந்து வேலை கொடுக்க வேண்டியவங்க, எங்களை ஒருமையில் திட்டுறாங்க. வயசானவங்கன்னு கூட பார்க்குறதில்லை. மரியாதைக் குறைவா பேசுறாங்க. ‘வேலை கிடைக்காமப் போயிடுமோ’ன்னு பயந்து, அவங்க திட்டுறதைக்கூட சகிச்சுக்க நாங்க தயாரா இருக்கோம். ஆனா, வேலையே கிடைக்காததுதான் எங்க வயிற்றெரிச்சல்!” என்று கிராமப் பெண்கள் கண்ணீருடன் குமுறுகிறார்கள்.

 

கூகுள் லொகேஷனிலும் சூட்சுமம்!

 

100 நாள் திட்டத்தில் ஊழலைத் தடுக்க, பணி நடக்கும் இடத்தின் கூகுள் லொகேஷனைக் குறிப்பிடுதல், பணியாளர்களின் புகைப்படங்களை அனுப்புதல் போன்ற விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. வேலையின் அளவீடு (Measurement) முறையாகப் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் சம்பளம் நேரடியாகத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கிற்குச் செல்ல வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் தினக்கூலி சுமார் ரூ. 294 ஆக உள்ளது.

 

ஆனால், இந்தக் குஞ்சங்குளம் கிராமத்தில் நிலைமையே வேறு. “பணித்தளப் பொறுப்பாளர் சுகன்யா, தனக்கு வேண்டப்பட்டவர்களைக் கொஞ்ச நேரம் வந்து தலைகாட்டச் சொல்லி, அதன் பிறகு அவர்களின் பெயரைப் பணிப்பதிவேட்டில் (Muster Roll) போட்டு, குறைந்தபட்சம் 3 முதல் 4 பணியாளர்களின் சம்பளத்தை முறைகேடாகப் பெற்றுச் செல்கிறார்,” என்று பாதிக்கப்பட்ட மக்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். வேறு வழியில்லாமல், உழைக்கும் மக்கள் தங்கள் பணத்தைக் காவு கொடுத்து, கண்முன்னே நடக்கும் இந்த மோசடியை வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

சுகன்யா போன்றவர்கள் கிராமப்புற மக்களின் உழைப்பைப் பயன்படுத்தி, அரசின் திட்டத்தையே கொள்ளையடிப்பது, ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தின்மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும் என்று மக்கள் மனப்புழுக்கத்தில் உள்ளனர்.

ஆளுங்கட்சி அரசியல் காரணமா?

 

இந்தத் திட்டம் மத்திய அரசின் திட்டம் என்பதால், கிராம மக்களுக்கு வேலை கிடைத்தால், அதனால் மத்திய ஆளுங்கட்சிக்கு ஆதரவு கூடிவிடுமோ என்ற அச்சத்தில், மாநில ஆளுங்கட்சியின் பின்னணியுடன் நியமிக்கப்படும் பொறுப்பாளர்கள் மூலம் வேலை வழங்குவதில் வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுகிறதோ என்ற சந்தேகமும் மக்களிடையே எழுந்துள்ளது. ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களையே இந்தப் பொறுப்புகளில் நியமிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கவே செய்கிறது.

 

இந்த அப்பட்டமான முறைகேடுகளையும், மக்களின் துயரத்தையும் கவனிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) உள்ளிட்ட அதிகாரிகளோ கண்டும் காணாமல் இருக்கின்றனர். “இந்த முறைகேடுகளில் அவர்களுக்கும் பங்கு செல்கிறதோ?” என்று கிராம மக்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்து விட்டனர்.

 

கலெக்டர் தீர்வு தருவாரா?

100 நாள் வேலைத் திட்டத்தின் நோக்கமே, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது, பெண்களை மேம்படுத்துவது. இதில், குறைந்தது மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருக்க வேண்டும் என்பது விதி. மேலும் கிராமங்களில் நீடித்த நிலையான சொத்துக்களை உருவாக்குவதுதான். (உதாரணம்: குளங்கள், வரத்துக்கால்வாய் சீரமைப்பு, பண்ணைக் குட்டைகள் அமைத்தல்). ஆனால், குஞ்சங்குளத்தில் நிலைமை நேர்மாறாக உள்ளது.

 

உடனடியாக கிராமசபை கூடி, இந்த விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட வேண்டும்! மாவட்ட ஆட்சியர் இந்தப் பிரச்சினைக்குள் நுழைந்து, குஞ்சங்குளம் கிராமத்தில் சுகன்யாவின் பதவியைப் பறித்து, அவர் செய்த மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி, ஏழைகளின் பணத்தை மீட்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பும், கோரிக்கையும் ஆகும்.

 

உழைத்துச் சாப்பிடும் காசே ஒட்டுவதில்லை… இதில் அடுத்தவர் வயிற்றில் மண்ணை அள்ளிப்போடும் சுகன்யா போன்றவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? காத்திருக்கிறோம்!

Leave a Reply

Right Menu Icon