ஹஜ் யாத்திரை சென்ற இந்தியர்கள் 42 பேர் பலி.. தவெக தலைவர் விஜய் இரங்கல்..!
சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை சென்றவர்களின் பேருந்து மீது எண்ணெய் டேங்கர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்ததில் தெலங்கானாவை சேர்ந்த 18 பேர் உட்பட 42 இந்தியர்கள் உயிரிழந்த துயர சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள், மெக்கா மற்றும் மதீனாவிற்கு ஹஜ் புனித பயணம் மேற்கொண்டிருந்தனர்.
அவர்கள் மெக்காவில் தொழுகையை முடித்துவிட்டு மதீனா நகருக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 1.30 மணியளவில் மதீனா அருகே உள்ள முப்ரிஹாத்(Mufrihat) பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த எண்ணெய் டேங்கர் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 11 பெண்கள், 10 குழந்தைகள் உட்பட 42 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 18 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
நள்ளிரவில் பயணிகள் அனைவரும் உறக்கத்தில் இருந்தபோது தீப்பிடித்ததால் அவர்கள் தப்பிக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக ஜெட்டா நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். இந்நிலையில் இந்தத் துயர சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதில், “தெலங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்ட 42 பேர், மதீனா அருகே நிகழ்ந்த விபத்தில் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.






