கிட்னி முறைகேடு வழக்கு : முக்கிய இடைத்தாரகரை கைது செய்த காவல்துறை
விசைத்தறி தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று முறைகேடாக கிட்னி தானம் பெற்ற வழக்கில் முக்கிய இடைத்தரகரை காவல்துறையினர் கைதுசெய்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில், சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக இடைத்தரகர்கள் ஸ்டான்லி மோகன், ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது கிட்னி மோசடி தொடர்பாக போலி ஆவணங்கள் தயாரித்ததாக் கூறப்படும் மருத்துவமனைகள் குறித்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
மேலும், கிட்னி மோசடியில் பள்ளிபாளையம் சத்யாநகரை சேர்ந்த முத்துசாமி என்கிற முத்தையனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவர் ஏழ்மை நிலையில் உள்ள விசைத்தறி தொழிலாளர்களை இலங்கை, நேபாளம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று முறைகேடாக கிட்னி விற்பனையில் ஈடுபட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து, சிறப்பு புலனாய்வு காவல்துறையினர் முத்தையனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அத்துடன், அவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்தனர். நீதிமன்ற காவலில் எடுக்கப்பட்ட இடைத்தரகர்கள் ஆனந்தன், ஸ்டான்லி மோகன் ஆகியோரிடம் விசாரணை நிறைவடைந்ததையடுத்து அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.






