டெல்லி குண்டுவெடிப்பு – செங்கோட்டை, மெட்ரோ நிலையம், நேதாஜி சுபாஷ் மார்க் பகுதிகள் மூடல்..!
டெல்லி செங்கோட்டை அருகே மாலை 6.30 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன் பின் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த பகுதி, மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது. சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே அமைந்துள்ளன.
இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் கார் வெடித்ததும் அலறியடித்து தப்பியோடினர். இதுதொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
எதற்காக கார் தீப்பிடித்தது. கார் வெடிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? யாருடைய கார் என்றும், எதற்காக இந்த பகுதிக்கு கார் கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து டெல்லியில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ, என்.எஸ்.ஜி, டெல்லி போலீசார் ஆகிய விசாரணை அமைப்புகள் புலன் விசாரணையை தொடங்கியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். எல்லா கோணங்களிலும் விசாரணை நடப்பதாக அவர் கூறியுள்ளார்.
டெல்லி கார் வெடி விபத்து சம்பவத்தைத் தொடர்ந்து சென்னையின் முக்கிய இடங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கொல்கத்தா, காசியாபாத், ஜம்மு, ஸ்ரீநகர், லக்னோ உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கார் தீப்பிடித்து வெடித்துச் சிதறியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.






