--- --:--:-- --

இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

3

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (26-10-2025) காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவு “மோன்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

 

இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (27-10-2025) காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 520 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 570 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவிலும், போர்ட் ப்ளேயரிலிருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கே 850 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

 

இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (28-ஆம் தேதி) காலை தீவிரப்புயலாக வலுப்பெற்று, மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக 28-ஆம் தேதி மாலை – இரவு நேரத்தில் கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

 

நேற்று (26-10-2025) மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (27-10-2025) காலை அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும், வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும்.

 

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon