ஆணவப் படுகொலைக்கு எதிராக தனி சட்டம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனி சட்டம் இயற்ற வேண்டும் என அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், ஏற்கனவே வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருப்பதை காரணம் காட்டி ஆளும் தரப்பில் இருந்து பதில் கொடுக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் நெல்லை கவின், திண்டுக்கல் இராமச்சந்திரன் ஆகியோரின் ஆணவப் படுகொலைகள் பெரும் அதிர்வலைகளை எழுப்பி மீண்டும் சாதிய ஆணவப் படுகொலைக்கு எதிரான தனி சட்டம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என். பாஷா தலைமையில் குழு அமைத்து அறிவித்துள்ளார். அந்தக் குழு கொடுக்கும் பரிந்துரையின் அடிப்படையில் சட்டம் இயற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இதுகுறித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டில் அவ்வப்போது ஏதேனும் ஒரு தொகுதியில் நடக்கும் துயர சம்பவமான ஆணவப் படுகொலைகள், நம் நெஞ்சை உலுக்கி, ஒட்டுமொத்த சமூகத்தையே தலைகுனிய வைத்துவிடுகிறது. பெண்கள் தங்கள் வாழ்வை தாங்களே தீர்மானிக்கும் உரிமையைப் பறித்துவிடும் ஆணாதிக்கமும் இந்தக் குற்றச் செயலான ஆணவப் படுகொலைக்குப் பின்னால் இருக்கிறது.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆணவப் படுகொலைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல், சமுதாய மாற்றத்தையும் ஏற்படுத்தி இந்த அநீதியைத் தடுக்க வேண்டும். ஆணவப் படுகொலைக்கு எதிரான சமூக மாற்றத்தில் சமூக நல இயக்கங்கள், சமூக ஆர்வலர் அமைப்புகள், மக்கள் எல்லோருக்கும் இந்தப் பொறுப்பு இருக்கிறது. சாதிக்கு எதிரான, ஆணவப் படுகொலைக்கு எதிராக, சமத்துவமின்மைக்கு எதிராக அனைவரும் குரல் கொடுத்துப் பேச வேண்டும்.
ஆணவப் படுகொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற கே.என். பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையம் சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைப் பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், அரசு விரைவில் சட்டங்கள் இயற்றும்” எனத் தெரிவித்தார்.





