--- --:--:-- --

ஒரே இடத்தில் 20க்கும் மேற்பட்டோர் மயங்கி விழும் துயரம்..!

1

கரூரில் கடந்த 27ஆம் தேதி விஜய்யின் பரப்புரை கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் மயங்கி விழும் துயரக் காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளன.
கரூரில் தவெக தலைவர் விஜய், கடந்த 27ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பலியாகினர்.

 

இந்த விவகாரத்தில் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சியினர் மீது சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியது. கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு விஜய் கரூர் செல்லாததும் கடும் விமர்சனத்தை எழுப்பியது.

 

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் குறித்து, சென்னை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சிறப்பு புலனாய்வு குழுவிடம் விசாரணை ஆவணங்களை ஒப்படைக்கும் பணி தொடங்கியுள்ளது. கரூர் நகர காவல் நிலையத்தில் இருந்த விசாரணை ஆவணங்களை, காவல் ஆய்வாளர் தனியார் காரில் சென்னைக்கு கொண்டு வருகிறார். சென்னையில் ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவிடம் இந்த ஆவணங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன.

 

இதற்கிடையே, விஜய்யின் பரப்புரை கூட்டநெரிசலில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் மயங்கி விழும் துயரக் காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளன. நெரிசலில் சிக்கியும் மயங்கி விழுந்து மதிப்பட்டும் உணர்ச்சியற்ற நிலையில் கிடந்தவர்களை அங்கிருந்தவர்கள் தூக்கிச்செல்லும் காட்சி அதிரவைத்துள்ளன. மூச்சுவிட முடியாமல் உயிருக்கு போராடிய பெண்ணை காவலர்கள் காப்பாற்ற முயன்ற காட்சிகளும் வெளியாகி உள்ளது.

 

வாய்ப்பேச முடியாத இளைஞர் ஒருவரும் சிக்கிக்கொண்ட நிலையில், பலர் உயிரிழந்திருப்பது தெரியாமல் விஜய் தொடர்ந்து பரப்புரை செய்ததை அந்த இளைஞர் சைகை மொழியில் கூறிய வீடியோவும் வெளியாகி உள்ளது. மூச்சுப்பேச்சற்ற நிலையில் கிடந்தவர்களை காப்பாற்ற முடியாமல் தலையில் அடித்துக் கொண்ட புதிய காட்சிகளும் வெளியாகி அதிரவைத்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon