--- --:--:-- --

இன்று இந்த மாவட்டங்களில் கனமழை அலெர்ட்..!

2

தமிழ்நாட்டில் நேற்று ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், விருதுநகர் மற்றும் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக நேற்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

 

இந்நிலையில், விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தில் ஓடையை கடக்க முயன்ற போது, தாய்-தந்தை கண் முன்பே ஆறு வயது சிறுவன் தண்ணிரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரர்பட்டியை சேர்ந்த அய்யனார் – தேவகி தம்பதி தங்களது 6 வயது மகன் அரவிந்த்துடன் அருப்புக்கோட்டை அருகே உள்ள மலைப்பட்டி பெருமாள் கோவிலுக்கு சென்றுள்ளனர்.

 

அங்கு திடீரென மழை கொட்டிய நிலையில், அவர்கள் கோயிலில் இருந்து திரும்பி வந்த போது சாலையின் குறுக்கே இருந்த ஓடையில் தண்ணீர் அதிகளவில் சென்றதால், தரைப்பாலம் மூழ்கியது. இதனால், சிறிது நேரம் அங்கு காத்திருந்த தம்பதி பின்னர், ஆபத்தை பொருட்படுத்தாமல், இருசக்கர வாகனத்தில் தரைப்பாலத்தை கடந்துள்ளனர்.

 

அப்போது, வெள்ளத்தில் சிக்கி மூவரும் அடித்துச் செல்லப்பட நிலையில், அய்யனாரும், தேவகியும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். ஆனால், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 6 வயது சிறுவனான அரவிந்த உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் சிறுவனின் உடலை மீட்டனர்.

 

இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறை அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பலத்த மழையால் கருமலைப் பகுதியில் உள்ள ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

 

தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்ததால், ஆற்றின் நடுவே துணி துவைத்துக் கொண்டிருந்த சீதாலட்சுமி மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும், பாறையில் ஏறி நின்று காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். இதையடுத்து அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர் இருவரையும் பாதுகாப்பாக மீட்டு கரைசேர்த்தனர்.

 

இதனிடையே, நீர்வரத்து அதிகரித்ததால் கிருஷ்ணகிரி 52 அடி உயரமுள்ள கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 50 அடியை கடந்தது. இதனால், தென்பெண்னை ஆற்றில் 2 ஆயிரத்து 618 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் மாலையில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. கழுகுமலை, நாலாட்டின்புதூர், திட்டங்குளம், மூப்பன்பட்டி, இலுப்பையூரணி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

 

இந்த சூழலில் தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளது.

 

இதேபோல, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon