காசா அமைதி ஒப்பந்தம் – ஹமாஸ் அமைப்புக்கு 4 நாள் கெடு விதித்த டிரம்ப்
காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்துள்ளார். இதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சம்மதம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. டிரம்புக்கு எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 8 முஸ்லிம் நாடுகளும் ஆதரவாக நிற்கின்றன.
இந்நிலையில், டிரம்ப் நேற்று கூறும்போது, இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் முன்பே 20 அம்ச திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டனர் என்றார். எனினும், இந்த திட்டங்களை பற்றி ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்று கேட்கப்பட்டதற்கு, இல்லை என டிரம்ப் கூறினார்.
ஹமாஸ் அமைப்பு அதனை ஏற்குமோ அல்லது இல்லையோ, இல்லையென்றால், வருத்தம் தரும் முடிவாக இருக்கும். இந்த திட்டத்திற்கு 3 அல்லது 4 நாட்களில் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என காலக்கெடுவும் விதித்துள்ளார். அல்லது நரகத்திற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டி இருக்கும் என எச்சரிக்கும் வகையில் பேசினார்.
காசா திட்டத்தின்படி, காசா முனை பகுதியில் உடனடி போர் நிறுத்தம், இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்பு, காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை கீழே போட வேண்டும் உள்ளிட்ட விசயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.






