--- --:--:-- --

காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது!

2

மிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

 

வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

 

இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா- வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற அக்டோபர் 3ஆம் தேதி வாக்கில் கரையை கடக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 2-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழையும், 3-ம் தேதி, செங்கல்பட்டு, விழுப்புரம். கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

தென்தமிழக கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், மத்திய – வடக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள், மத்திய – வடக்கு வங்கக்கடலின் ஏனைய பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள், ஆந்திரா – ஓரிசா – மேற்கு வங்க கடலோரப் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் ஜராத் கடலோரப் பகுதிகள், வடகிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு இன்று செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

Right Menu Icon