--- --:--:-- --

மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் போலீஸின் அடுத்தக்கட்ட நடவடிக்கை?

1

பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் மாதம்பட்டி ரங்கராஜ், கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘மெஹந்தி சர்கஸ்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து கேசினோ, மிஸ் மேகி, பெண்குயின் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கியுள்ள ரங்கராஜ், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராக அங்கம் வகித்து வருகிறார்.

 

ரங்கராஜுக்கு ஏற்கனவே ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர், தனது மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறப்பட்ட நிலையில், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் நட்பில் இருப்பதாக தகவல் வெளியானது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் லிவிங் டுகெதரில் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஜாய் கிரிசில்டாவுக்கு ஏற்கனவே ஜே.ஜே.ஃபிரெடிக் என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அவரும், தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

 

இதனிடையே, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஜாய் கிரிசில்டா, சமூக வலைதளத்தில் சில போட்டோக்களை பதிவிட்டார். அதில், தனக்கும், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் கோவிலில் வைத்து திருமணம் நடந்து முடிந்ததாக கூறி, மாலையும் கழுத்துமாக இருந்த போட்டோக்களை பதிவிட்டிருந்தார். அத்துடன், தான் 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியிருந்தார். அதற்கு, முதல் மனைவியை விவாகரத்து பெறாமல் ரங்கராஜ் எப்படி இரண்டாவது திருமணம் செய்ய முடியும் என்று கண்டனக் குரல்கள் எழுந்தன.

 

இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி, ரங்கராஜுக்கு எதிராக சென்னையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதில், ரங்கராஜ், தன்னை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியதாகவும், பிரிந்து வாழ்ந்து வந்த தனது கணவருடன் முறைப்படி விவாகரத்து பெற அறிவுறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன், ரங்கராஜ் அவரது மனைவியுடனும் விவாகரத்து பெறவில்லை என்பதை மறைத்ததாகவும் சாடியிருந்தார்.

 

மேலும், திருமண ஆசைவார்த்தை கூறி பலமுறை தன்னை மிரட்டி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டியிருந்தார். கடைசியாக தான் கர்ப்பமானதும், நான் வேண்டுமா அல்லது குழந்தை வேண்டுமா என மிரட்டிவிட்டு ரங்கராஜ் விலகிச் சென்றதாகவும் ஆதங்கம் தெரிவித்திருந்தார். தனக்கும், தனது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் நீதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஜாய் கிரிசில்டாவின் அந்த புகாரின் பேரில், விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் அருண் சென்னை பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் வனிதா விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

 

அந்த உத்தரவின் படி ஜாய் கிரிசில்டாவை 22ம் தேதி திங்கள் கிழமை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மனை தொடர்ந்து ஜாய் கிரிசில்டா திங்கள் கிழமை காலை 11 மணிக்கு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார்.

 

துணை கமிஷனர் வனிதா, ஜாய் கிரிசில்டாவிடம், மாதம்பட்டி ரங்கராஜ் உடனான தொடர்புகள்? திருமணம் செய்ததற்கான ஆவணங்கள், கருக்கலைப்பு செய்ததற்கான ஆவணங்கள் குறித்து 50க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்டு விசாரணை நடத்தினார். தற்போது ஏஐ தொழில் நுட்பம் இருப்பதால் திருமணம் செய்த புகைப்படங்கள், அதற்கான தரவுகள் குறித்தும் துணை கமிஷனர் விசாரணை நடத்தினார்.

 

சுமார் 6 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கிரிசில்டா, தனக்காகவும், தனது குழந்தைக்காகவும் எந்த உச்சத்துக்கும் சென்று நீதி கேட்பேன் என தெரிவித்தார். இது மாதம்பட்டி ரங்கராஜின் குழந்தை என்றும் குழந்தையை விட்டுவிட்டு அவர் ஜாலியாக ஊர் சுற்றலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

 

அதே பேட்டியில், “என்னை திருமணம் செய்துகொள்கிறேன் என கூறி மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றிவிட்டார் என பலரும் கூறுகிறீர்கள். அது தவறு. அவர் என்னை திருமணம் செய்துகொண்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதேபோல யூடியூப்பில் பலரும் அவதூறாக பேசுகிறார்கள். இதனால் தான் பலரும் வெளியில் வந்து கருத்து சொல்ல பயப்படுகிறார்கள். நான் தற்போது கர்ப்பமாக இருக்கிறேன். என்னை பற்றி அவதூறு பரப்பாதீர்கள்” என்றார்.

 

மேலும், “நான் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்றது. மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர். சட்டப்படியாக அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். என்னை தான் பலரும் குற்றம்சாட்டுகிறீர்களே தவிர, மாதம்பட்டி ரங்கராஜிடம் எதுவும் கேட்பதில்லை” என்றார். இந்த விவகாரத்தில் போலீசாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Right Menu Icon