முதலமைச்சர் தனது சொந்த மாவட்டத்தையே கருவாடாக காயவிட்டிருக்கிறார் – விஜய் குற்றச்சாட்டு!
சொந்த மாவட்டத்தையே கருவாடாக காயவிட்டிருக்கிறார் முதலமைச்சர் என்று திருவாரூரில் பரப்புரை செய்த தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார். நாகப்பட்டினத்தைத் தொடர்ந்து திருவாரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அதன்படி, விவசாயிகளை அடையாளப்படுத்தும் வகையில் பச்சை நிறத் துண்டுடன் வந்து பேசத் தொடங்கிய விஜய், “ரொம்ப நாளாக ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் மார்தட்டிக் கொண்டவர் யார் என உங்களுக்கு தெரியும்.
ஆனால் அவரது மகன் தமிழ்நாடு என்னும் தேரை ஓடவிடாமல் கட்டைபோட்டு நிறுத்தியுள்ளார். திருவாரூர் சொந்த மாவட்டம் என சொல்கிறார்கள். ஆனால் இங்கு திருவாரூர் கருவாடாக காய்கிறது. திட்டங்களுக்கு கருணாநிதியின் பெயரை வைத்தால் போதுமா?. உங்களின் அப்பா பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் அடிப்படை சாலை வசதி கூட இல்லையே. திருவாரூர் மாவட்டத்தை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை.
திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கே மருத்துவம் பார்க்கிற நிலைமை தான் உள்ளது. திருவாரூர் ஒரு மாவட்டத்தின் தலைநகர். ஆனால் இங்கிருக்கும் பஸ் ஸ்டாண்ட் தேசிய நெடுஞ்சாலையுடன் கூட இணையவில்லை. இந்த மாவட்டத்தில் ஒரு மந்திரி இருக்கிறார். அவரின் வேலை முதல்வர் குடும்பத்துக்கு வேலை செய்வதுதான். உங்களுடன் ஸ்டாலின் என்று உங்களது குடும்பத்திற்குத்தான். மக்களுடன் நீங்கள் நெருக்கமாக இல்லை.
டெல்டா விவசாயிகள் நெல்லுக்கு கமிஷன் வாங்கப்படுகிறது. மூட்டைக்கு 40 ரூபாய் என்று கமிஷன் வாங்கப்படுகிறது. பல நூறு கோடி இந்த நான்கு வருடத்தில் விவசாயிகளின் பணத்தில் பறிக்கப்பட்டுள்ளது. சிஎம் சார் உங்களது ஆட்சியில் இது நடந்திருக்கிறது. 40க்கு 40 என்பது உங்களுக்கு தேர்தல் ரிசல்ட் ஆக இருக்கலாம். ஆனால் இங்கே உள்ள விவசாயிகளுக்கு அது அவர்களின் வயிற்றை அடித்துப் பிடுங்கப்பட்ட பணம். நெல் கொள்முதலில் லஞ்சம் வசூலிக்கப்படுவதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும்.
குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம் இது தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள். பொய்யான வாக்குறுதிகளைத் தரமாட்டோம். நடைமுறைக்கு எது சாத்தியமோ அதனையே வாக்குறுதிகளாக தருவோம்.” என்று தெரிவித்தார். தொடர்ந்து தொண்டர்களைப் பார்த்து, “எங்கே சென்றாலும் இது சும்மா கூடிய கூட்டம், இது வாக்குகளாக மாறாது என்கிறார்கள். அது அப்படியா?” என்று கேள்வி எழுப்பினார்.






