சென்னையில் இரவில் வெளுத்து வாங்கிய மழை..!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2வது நாளாக இரவில் மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த நிலையில், புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், நசரத்பேட்டை, திருமழிசை, மாங்காடு, குன்றத்தூர், வளசரவாக்கம், ராமாபுரம், போரூர், வேலப்பன்சாவடி, திருவேற்காடு, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், நெற்குன்றம், மதுரவாயல் மற்றும் விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை பெய்தது.
அதேபோல், திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. புட்லூர், காக்கலூர், செவ்வாய்பேட்டை, வேப்பம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும், திருமங்கலம், பாடி, கொரட்டூர், அம்பத்தூர், அயப்பாக்கம், பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
இதற்கிடையே, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னல், பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்மேற்கு – மத்தியமேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். ஆகையால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.





