--- --:--:-- --

டெல்லியில் அமித் ஷா உடனான சந்திப்பு ஏன்?

1

டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளிக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுகவைப் பொறுத்தவரை இம்முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கவுள்ளது. தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அண்மையில் அடுத்தடுத்து அறிவித்தனர்.

 

இவை ஒருபுறமிருக்க முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையனும் கட்சிக்குள் போர்க்கொடி தூக்கியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் , டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கெடு விதித்தார். ஆனால் தனது முடிவில் உறுதியாக உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனக்கு கெடு விதித்த செங்கோட்டையனை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கினார்.

 

 

அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் விதித்த 10 நாட்கள் கெடு முடிந்த அடுத்த நாளே டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி அமித் ஷாவிடம் அதிமுக சார்பில் கடிதம் வழங்கினார்.

 

 

இந்நிலையில், டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலம் சேலம் திரும்பிய எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி பயணம் குறித்து இன்று காலை 10 மணிக்கு பதிலளிப்பதாகக் கூறினார். எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து செங்கோட்டையனும் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அப்போது, எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக செங்கோட்டையன் பேசுவார் என்று கூறப்படுகிறது.

Right Menu Icon