திருச்சி மரக்கடையை சூழ்ந்த தவெக தொண்டர்கள்..!
த.வெ.க தலைவர் விஜய்யின் முதல் பிரச்சாரம் இன்று திருச்சியில் தொடங்கவுள்ளது. இதனையொட்டி, சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக அவர் திருச்சி வந்தடைந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவரை பார்ப்பதற்காக, வெளியே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
இதில், பலர் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்தனர். விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பிரச்சார வாகனத்தில் விஜய் சென்று கொண்டிருக்கிறார். அவர் செல்லும் வழிநெடுகிலும் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் சூழ்ந்துள்ளனர்.
அங்கிருந்து பாலக்கரை வழியாக மரக்கடை பகுதிக்கு வரும் விஜய், அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். விஜய்யை பார்க்க ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் பிரசாரத்தை மேற்கொள்கிறார். அரியலூரில் விஜய் பிரசாரத்திற்கு 25 நிபந்தனைகளை விதித்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர். டிசம்பர் வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் மக்கள் சந்திப்பை நடத்த உள்ளார்.
2026 சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் மக்கள் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்கள் சந்திப்பு பிரசாரத்திற்காக நவீன ரக பஸ்சை விஜய் பயன்படுத்த உள்ளார். இந்த பஸ்சில் தொண்டர்கள் யாரும் ஏறி விடாதபடி இரும்பு வேலிகள் பஸ்சின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. நவீன கேமராக்கள், ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளது.
த.வெ.க. தொடங்கப்பட்டு இதுவரை 2 மாநில மாநாடுகளை நடத்தியிருக்கும் விஜய், தற்போது முதல்முறையாக மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். தனது முதல் பிரச்சாரத்தில் அவர் என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.





