தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுக்கும்!
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு – மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். ஆகையால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.






